ஆலயங்கள் நமது சமய நம்பிக்கை,பண்பாடு மற்றும் அதன் செயல்பாடுகளை மேலோங்க செய்திடும் அதேவேளையில் நம் சமுதாய மேம்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்காற்ற வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் சமூகச் சிந்தனைவாதியுமான மாண்புமிகு வ.சிவகுமார் கேட்டு கொண்டார்.
ஆலயங்கள் சமயக்காரியங்களோடு மட்டும் நின்றுவிடாமல் நம்மினத்தின் கல்வி,சமூக பொருளாதாரம்,ஒருமைப்பாடு என பல்வேறு நிலைகளில் அதன் பங்களிப்பினைச் செய்திடல் வேண்டும் என்றார்.
ஜெலாப்பாங்,தாமான் மேரு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு வருகை அளித்த பின்னர் சிவகுமார் இதனை வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி,ஆலயங்கள் சமூக மேம்பாட்டு மையங்களாக உருவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர் ஆலயங்கள் நம் சமுதாயத்திற்கான தகவல் மையங்களாகவும் திகழ வேண்டும் என மேலும் கேட்டு கொண்டார்.
ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில் ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று அவ்வாலயம் சென்று கடவுளை வணங்கிய சிவகுமார் ஆலயத்தின் செயல்பாடு,அதன் உட்கட்டமை,மேம்பாடு என பல விடயங்களைப் புதிய ஆலய நிர்வாகத்துடன் கலந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.