புக்கிட் மெர்தாஜம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசத்திப் பெற்ற சாம்பியன் லீக் செலேஜ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில், ஜூரு யாங்ஸ்டார் கால்பந்து குழு சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.
புக்கிட் மெர்தாஜம்,பாண்டார் பெர்டா கால்பந்து திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஜூரு யாங்ஸ்டார் மற்றும் ஜேஎப்எப்சி குவினர் அணிகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையைப் பெற்றன. பின்னர் நடந்த பைனால்டி ஷூட்-அவுட்டில், ஜூரு யாங்ஸ்டார் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை தட்டிச் சென்றது.
அணியின் நிர்வாகி மணிராஜா இராமன் தெரிவித்ததாவது, “இவ்வாண்டின் முதல் முக்கியமான கிண்ணத்தை எங்கள் அணியே வெற்றிகொண்டது. இது எங்களுக்கு பெருமைக்குரிய சாதனை” எனக் கூறினார்.
இறுதிப் போட்டியில் ஜூரு யாங்ஸ்டார் வீரர் சந்திரன் மாரியப்பன் அடித்த கோல் அணியை முன்னிலையில் நிறுத்தியது. மேலும், பைனால்டியில் புஸ்பராஜன் அடித்த கோல் அணிக்கு வெற்றியை உறுதிப்படுத்தியது. அணியின் கேப்டனாக மாதவனும், துணைக் கேப்டனாக புஸ்பநாதனும் வீரர்களுடன் இணைந்து சிறப்பாக விளையாடியதுடன், வெற்றி கிண்ணத்தை எடுத்து நிறுத்தினர்.
ஜூரு யாங்ஸ்டார் கால்பந்து குழு 1980களில் தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சங்கமாகும். கால்பந்து துறையில் அனுபவம் மிக்க ஆறுமுகம் (மாயா), இராஜூந்திரன் உள்ளிட்டோர் பல ஆண்டுகள் இந்த சங்கத்தை நடத்தி, வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
புக்கிட் மெர்தாஜம் மற்றும் பினாங்கு மாநில அளவிலான பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றதுடன், சேகர் மற்றும் மணிவர்மண் ஆகிய சகோதரர்கள் பினாங்கை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் தொடங்கிய சாம்பியன் லீக் செலேஜ் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றிகொண்ட ஜூரு யாங்ஸ்டார், இறுதியில் கிண்ணத்தை கைப்பற்றி, மாவட்ட மட்டத்தில் தனது ஆற்றலை மீண்டும் நிரூபித்துள்ளது.