அனைத்துலக நிலையில் TTG பயண விருதில் மலேசியா மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளதாக மாண்புமிகு வ.சிவகுமார் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற 34ஆவது வருடாந்திர TTG பயண விருதுகள் 2025’ இல் சிறந்த மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (தேசிய அளவிலான) விருதை வென்றதற்காக மலேசியா மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தை (MyCEB) சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (MOTAC) பெருமையுடன் வாழ்த்தியிருப்பதையும் நினைவுக்கூர்ந்த அவர் இவ்வாழ்த்து பெருமிதமானது என்றார்.
இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தை, நிகழ்வில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய MyCEB இன் தலைவருமான சிவகுமார் தலைமையேற்று அவ்விருதை பெற்றார்.
இந்த வெற்றி, நாட்டின் வணிக நிகழ்வுகள் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் MyCEB இன் சிறப்பை நிரூபிப்பது மட்டுமல்லாமல், சர்வதேச மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்குத் தேர்ந்தெடுக்கும் இடமாக மலேசியாவின் போட்டித்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் சுட்டிக்காண்பித்தார்.
MyCEB, அதன் தோழமை மற்றும் அதுசார்ந்த பங்குதாரர்கள் மற்றும் முழு வணிக நிகழ்வுகள் சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் MOTAC தனது உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
மலேசியர்கள் முழு உணர்வோடு மலேசியாவின் பெயரை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும்,மலேசியாவின் புகழை உலகரங்கில் வானுயர உயர்த்திட அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயல்பாடுக்கும் மலேசியர்களின் ஆதரவும் ஆக்கப்பூர்வமான செயல்பாடும் தொடர்ந்து நிலைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவ்விருது மலேசியா தொடர்ந்து இத்துறையில் வலுவான நிலைத்தன்மையை கொண்டிருக்க உத்வேகம் அளிப்பதாகவும் சிவகுமார் தனது மகிழ்ச்சியினை பகிர்ந்தும் கொண்டார்.