மாவட்டத்திலிருக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள, செங்கப்படுத்தான் காடு (சங்கம் படைத்தான் காடு) என்ற கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாளில் கல்யாணசுந்தரம் பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ய
2ஆம் வகுப்பு வரை படித்தார்.
குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், நடனக்காரர், உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லிக் கடை என15க்கும் மேற்பட்ட தொழில்களில் கல்யாணசுந்தரம் ஈடுபட்டு வந்தார்.
சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரதுப் பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த அவரதுப் பாடல்களை, ‘ஜனசக்தி’பத்திரிகை வெளியிட்டு வந்தது.
விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு \"பாரதிதாசன் வாழ்க\" என்று எழுதி விட்டுதான், கடிதம் எழுதத் தொடங்குவாராம்.
பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப் படத்துக்காக, 1955 இல் முதன் முதலாக பாடல்கள் எழுதினார். அந்தப் படத்தில் \"வாடாத சோலை\", \"காப்பி ஒண்ணு எட்டணா\", \"தேனாறு பாயுது செங்கதிரும்\" போன்ற இனியப் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை கல்யாணசுந்தரம், அழுத்தமாகப் பதித்தார்.
1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப் படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப் படங்கள் உட்பட, பல திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். 187 திரைப் படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன.
இயற்கை, நகைச்சுவை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை அவரதுப் பாடல்களின் கருப்பொருளாக அமைந்திருந்தன.
அவரதுப் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. \"சின்னப் பயலே சின்னப் பயலே\", \"தூங்காதே தம்பி தூங்காதே\", \"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே\", \"செய்யும் தொழிலே தெய்வம்\"’,\"கொக்கரக் கொக்கரக்கோ சேவலே\",
\"என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே\", \"திருடாதே பாப்பா திருடாதே\", \"ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே\", \"பக்கத்திலே இருப்பே நான் பாத்துப் பாத்து ரசிப்பேன்\" \"நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு\"*, “வருஷத்திலே ஒருநாளு தீபாவளி\", \"ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்\", \"ஆண்கள் மனமே அப்படித்தான் அது அடிக்கடி மாறும் இப்படித்தான்\", \"காயமே இது மெய்யடா வெறும் காற்றடைத்த பையடா\", \"இன்பமுகமொன்று கண்டேன்\", \"துணிந்தால் துன்பமில்லை\", \"கையிலே வாங்கினேன் பையிலே போடலே\", \"குட்டி ஆடு தப்பி வந்தா\", \"சின்னஞ்சிறு கண்மலர்\" போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
எளியத் தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவரது நெருங்கிய நண்பராவார்.
மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. அவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959ஆம் ஆண்டு அவர்களுடைய மகன் குமரவேல் பிறந்தார். அவர் தற்போது அரசுப் பணியிலுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தனது 29 வது வயதில் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8 ஆம் நாளில் அகால மரணமடைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த அவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்த வேண்டிய சாதனைகளை நிகழ்த்திச் சென்றார். அதுபோல் திரைத்துறையில் தான் சம்பாதித்ததை சீரழிக்காமல், தன் வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
அவரதுப் பாடல்களின் தொகுப்பு 1965 இல் வெளிவந்தது. அவரது நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பலவும் அதில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இன்று பட்டுக்கோட்டையார் நினைவு தினம்