Alaioli
பெருநாள் கொண்டாட்டங்கள் தேசிய ஒருமைப்பாட்டின் மூலதனம் - டத்தோ சிவநேசன் நினைவுறுத்து!!

சுங்கை,ஏப்04: பெருநாள் கொண்டாட்டங்களும் திறந்த இல்ல உபசரிப்புகளும் மதம்,இனம் கடந்து தேசிய ஒருமைப்பாட்டின் மூலதனமாகவும் அதனை மெய்ப்பிக்கும் பெரும் சான்றாகவும் திகழ்வதாக மாநில சுகாதாரம்,மனுதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் நினைவுறுத்தினார்.


சுங்கை சட்டமன்றத் தொகுதியில் மக்களின் வளர்ச்சி,மேம்பாடு உட்பட அடிப்படைத் தேவையென ஒவ்வொன்றும் மிகத்துள்ளியமாக கவனிக்கப்படுவதோடு அவை நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய அவர் இங்குள்ள மலாய் பாரம்பரிய கிராமங்களும்,சீனப் புதுக்கிராமம் மற்றும் இந்தியர் கிராமங்கள் என அனைத்திற்குன் அதன் உட்பட்டமைப்பு உட்பட அனைத்து வசதிக்கும் தேவைக்கும் நிறைவான நிதி ஒதுக்கப்பட்டு கிராமத்து மேம்பாட்டு நிர்வாகத்தின் கீழ் நன் தீர்வை தாம் ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


சுங்கை பெக்கான் லாமா சமூக மண்டபத்தில் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பின் போது சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் தனதுரையில் இதனைத் தெரிவித்தார்.


அதே வேளையில், பள்ளிக்கூடங்கள்,மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தாம் தனித்துவ அக்கறையும் முனைப்பும் காட்டி வருவதாகவும் ஒவ்வொரு பள்ளியின் நகர்வையும் செயல்பாட்டையும் அவ்வப்போது கேட்டறிவதோடு தேவையான மானியங்களையும் வழங்கி கற்றல் கற்பித்தல் சீராய் சரியான இலக்கை நோக்கி நகர்வதை கண்கானித்தும் வருவதாக கூறினார்.


அதுபோலவே,சுகாதாரத்திலும் பெரும் கவனம் செலுத்தி வரும் நிலையில் சுங்கை,குனோங் பெசாவூட்,பீடோர் வட்டார அரசு சுகாதார கிளினிக்குகள் மேம்படுத்தப்பட்டிருப்பதோடு அம்புலன்ஸ் வசதிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


தொடர்ந்து பேசிய அவர்,எஸ்.பி.எம் தேர்வு முடிவு வெளியாகியிருக்கும் நிலையில் கல்வியில் பின் தங்கியிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க அவர்களை தொழிற்திறன் கல்வியில் சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள பொது அமைப்புகள்,ஆசிரியர்கள்,சமூக பிரதிநிதிகள் உட்பட பெற்றோர்களும் அம்மாணவர்களுக்கு ஆலோசனைகலையும் வழிக்காட்டலையும் வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


பேரா மாநிலத்தில் வருங்காலத்தில் தொழிற்திறன் பணிகளுக்கு அதிகமான தொழிலாளர்களின் தேவை இருக்கும் சூழல் உருவாகி வரும் நிலையில் தொழிற்துறை கல்வி மாணவர்களின் முதன்மை தேர்வாகவும் இருத்தல் வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.


தொழிற்திறன் கல்வியின் அவசியத்தை உணர்த்தவும் தேவையான ஆலோசனையோடு பயிற்சிகளையும் வழங்கவே சுங்கையில் தாம் பயிற்சி மையத்தையும் அமைத்திருப்பதாகவும் கூறும் சிவநேசன் தொழிற்துறை கல்வி சார்ந்த ஆலோசனைகளுக்கு தனது சேவை மையத்தையோ அல்லது \"Pasak\" எனப்படும் பேரா மாநிலத் தொழிற்திறன் மையத்தையோ அணுகுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.


முன்னதாக இம்மதிரியான பெருநாள் காலக் கொண்டாட்டங்கள் ஒரு இனத்தின் பண்பாடாக இருந்தாலும் மலேசியாவைப் பொருத்தமட்டில் மலேசியர்களின் பெருநாளாகவே மகிழ்ச்சியான தருணத்தோடு நம் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் எடுத்துரைக்கும் உன்னதமாகவே அது திகழ்கிறது என்றார்.


மேலும்,பல்லினம்,வெவேறான பண்பாடு,பாரம்பரியம்,மதம்,இனம் என எல்லாமே வேறுபட்டிருந்தாலும் மலேசியராய் நாம் கொண்டிருக்கும் ஒற்றுமையும் புரிதலும் மட்டுமின்றி மதநல்லிணக்கமும் உலக நாடுகளுக்கே நாம் பெரும் முன்மாதிரியாக திகழ்வதாக உணர்ச்சிபூர்வமாக அவர் தனதுரையில் பதிவிட்டார்.


மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் பொது மக்களோடு காவல்துறையினர்,கிராம மேம்பாட்டு நிர்வாகத்தினர்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்பினர்,தீயணைப்பு படையினர்கள்,அரசியல் சார்ந்தவர்கள் உட்பட தலைமையைரியர்கள்,ஆசிரியர்களோடு மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி ஜய்டியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News