Alaioli
  சபாவுடனான இறுதி ஆட்டத்தில் பினாங்கு கால்பந்து அணிக்கு திரளான ரசிகர்கள் பேராதரவு!

பினாங்கு ஏப் 6 -மாநிலத்தின் ஜோர்ஜ்டவுன் வட்டாரத்திலுள்ள நகர விளையாட்டரங்கு மைதானத்தில்நிகழ்ந்த மலேசியக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கா இறுதி  ஆட்டத்தின் முதல் சுற்றில், சபா அணியை எதிர்த்து  களமிறங்கிய பினாங்கு அணிக்கு ஆதரவாக, திரளான ரசிகர்கள் அலைகடலெனத் திரண்டனர்.


மாநிலத்தின் இரண்டாம் நிலை துணை முதல்வர் ஜக்தீப் சிங் டியோ  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்; சமூக மேம்பாடு மற்றும் முஸ்லிம் அல்லாதோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம்;  ஸ்ரீ டெலிமா சட்டமன்ற  உறுப்பினர் கோனி டான்; இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹரி உள்ளிட்ட மாநில அரசியல் பிரமுகர்கள் பலரும் இவ்வாட்டத்தை நேரில் கண்டுகளித்து, பினாங்கிற்கு ஆதரவு வழங்க வருகையளித்திருந்தனர்.


இவர்களுடன் மாநகர் மன்ற மேயர்  டத்தோ அ.ராஜேந்திரன் தம்பதியரும் தங்களது பேராதரவை வழங்கும் பொருட்டு உற்சாகத்துடன் கலந்து கொண்ட வேளையில் மாநிலத்தின் பற்பலப் பகுதிகளிலிருந்து எண்ணற்ற ரசிகப் பெருமக்கள்,  இவ்வாட்டத்தைக் காண  திரளாகக் குழுமியிருந்தனர்.


இந்த விறுவிறுப்பான போட்டியில்,  இரு அணிகளும் 1-1 என்ற கோல்  கணக்கில் சமநிலை கண்டன. ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில், பினாங்கு அணியின் முன்னணி வீரர் டிலான் வென்செல்-ஹால்ஸ்  முதல் கோலை அடித்ததும்  அரங்கமே ஆரவாரத்தில் மூழ்கியது.இருப்பினும் பின்னர் சபா அணிக்கு கிட்டிய பெனால்டி கிக் மூலம்  ஆட்டம் சமநிலை கண்டது.


இவ்வாட்டத்திற்கான இரண்டாம் சுற்று எதிர்வரும் 19ஆம் நாள் கோத்தாகினபாலு அரங்கத்தில் நடைபெறுமென்ற அறிவிப்பின் பேரில், அணியின் பயிற்சியாளர்  வான் ரோஹைமி வான் இஸ்மாயில், வெற்றியை நிலை நாட்டுவதற்கு பினாங்கு அணி தன் உயர்வான போராட்ட குணத்தை திறம்பட வெளிப்படுத்தி வெற்றி பெறுமென்று நம்பிக்கை தெரிவித்தார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News