Alaioli
சிலாங்கூர் மாநில அளவில் அமைதியற்ற வழிபாட்டுத் தலங்கள் ( RITK) தொடர்பான தரவும் விளக்கமும்- பாப்பா ராய்டு தகவல்

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம், ஏப்ரல் 28 -  சிலாங்கூர் மாநில அளவில் அனுமதியற்ற வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து தற்போது மக்கள் மத்தியில் நிலவி வரும் கருத்துகள் மற்றும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் எழுப்பியுள்ள விவகாரங்கள் தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தை தாம் முன்னெடுத்து வழங்குவதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான், மாநில சட்ட மன்றக் கூட்டத் தொடரின் ஏழாவது நாளில் தமது கருத்தை இங்கே வெளியிட்டார்.


அனைத்துத் தரப்பினரும் உண்மையான தரவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரப் பூர்வ வழிகள் மூலமாக மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


முதலாவதாக, மலேசிய ரீதியில் செயல்படும் இந்து சமூகத்தையும் பக்தர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பான மலேசிய இந்து சங்கம், இத்தகைய முக்கிய விவகாரங்களில் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு மாநில அரசிடம் தரவுகளை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.


அதே வேளையில், ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத புள்ளி விவரங்கள் மக்களிடையே குறிப்பாக பக்தர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு விவரித்தார்.


தற்போதைய பதிவுகள்படி, 1,169 என்ற எண்ணிக்கை என்பது சிலாங்கூர் மாநில அளவில் அனுமதியின்றி இருக்கும் அனைத்து சமய வழிப்பாட்டுத் தலங்களை உட்படுத்தியதாகும்.


இந்து ஆலயங்கள், சீன ஆலயங்கள், சீக்கிய ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதி தொழுகை மடங்கள் ஆகிய மொத்த புள்ளி விவரங்கள் என்று அவர் கூறினார். இதில் 688 என்ற எண்ணிக்கை (SPBT) பதிவுகள்படி குறிப்பாக இந்து ஆலயங்களை மட்டுமே குறிக்கிறது என்று பாப்பா ராய்டு தெரிவித்தார்.


இருப்பினும், இந்தத் தரவுகள் பொதுப்பணித் துறையினால் (JKR) இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றும் தாம் தெளிவுபடுத்துவதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.


அதே வேளையில், சிலாங்கூர் மாநிலம் செழிப்புடனும் சமூக நல்லிணக்கத்துடனும் பயணிப்பதில் அதை உறுதி செய்யும் வகையில் துல்லியமான தரவுகளைத் திரட்டி வரும் அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும்  பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாப்பா ராய்டு மேற்கண்ட அறிக்கை வாயிலாக தமது எண்ணங்களைப் பிரதிபலித்தார்.- Alaiolinews

Leave a Comment
Trending News