Alaioli
டத்தோ சிவநேசனின் செயல்பாட்டால் தமிழ் வளர்க்கும் ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளி புதுப்பொலிவை கண்டது.

சிவாலெனின்

பீடோர்,ஏப்29- பீடோர் வட்டாரத்தில் கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் வளர்த்து வருவதோடு இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நம் மாணவர்கள் செல்வதை உறுதியும் செய்து வரும் ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளி சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அ..சிவநேசனின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டினால் புதுப்பொலிவை எட்டியது.


இப்பள்ளியின் தேவைகள் குறித்து பள்ளி நிர்வாகம் பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை பலரிடம் முன் வைத்தும் அவை தீர்வை எட்டாத நிலையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வு துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ சிவநேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டக் குறுகியக் காலத்திலேயே அப்பள்ளியின் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு புதுப்பொலிவையும் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பள்ளிக்குத் தேவையான நவீனக் குழாய் வசதி,மேசை,நாற்காலிகள்,மாணவர் மழையில் நனையாமல் நடந்து செல்ல மேற்கூரைக் கொண்ட நடைப்பாதை,வகுப்பறையின் வெப்பக்கூரை சீரமைப்பு என பல்வேறு தேவைகளை செய்து கொடுத்து,அப்பணிகள் நிறைவடைந்தப் பின்னர் அதனை நேரில் பார்வையிடவும் டத்தோ சிவநேசன் அப்பாலர்ப்பள்ளிக்கு இன்று வருகை புரிந்தார்.


இப்பாலர்ப்பள்ளியின் தேவைகள் நிறைவு பெற்று புதுபொலிவை எட்ட வெ.30 ஆயிரத்து 400 செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இவ்வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நம் மாணவர்கள் செல்வதை தொடர்ந்து உறுதி செய்து வரும் இப்பாலர்ப்பள்ளியின் தேவைகளை நிறைவு செய்ததில் தாம் நிறைவு கொள்வதாக கூறிய டத்தோ சிவநேசன் இவ்வட்டாரத்தில் இயங்கும் ஒரே தமிழ் பாலர்ப்பள்ளியான இப்பள்ளியிலிருந்து முதலாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் இங்குள்ள துன் சம்பந்தன்,பீடோர் தகான் தோட்டம், பீக்கம்,பனோப்டேன் தோட்டம் ஆகிய தமிழ்ப்பள்ளியில் தங்களின் ஆரம்பக் கல்வியைத் தொடரும் உத்தரவாதத்தை ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளி வழங்குவதாகவும் அவர் தனது நம்பிக்கையை இன்றைய வருகையின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இப்பாலர்ப்பள்ளி தற்போது இயங்கும் கட்டிடம் தான் பீடோர் அரசு தமிழ்ப்பள்ளியாக 1928இல் தொடங்கப்பட்டது என்பது வரலாறு.


பின்னர் இவ்விடத்திலிருந்து பீடோர் அரசு தமிழ்ப்பள்ளி புதிய இடத்திற்கு இடம் மாற்றம் கண்டபோது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியாக 1983 தொடங்கி இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற வரலாற்றையும் நினைவுக்கூர்ந்த சிவநேசன் மத்திய அரசிற்கு சொந்தமான இவ்விடம் தொடர்ந்து ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளிக்கு குத்தகை அடிப்படையில் அதன் கல்வி பயணம் தொடர கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு வோங் கா வுடன் விரைவில் பேசவிருப்பதாகவும் இப்பேச்சுவார்த்தை அதன் உண்மை நோக்கத்தில் வெற்றியடையும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.


அவ்வாறு அனுமதி பெறும் போது இப்பாலர்ப்பள்ளிக்கு அழகிய திடல் வசதி அல்லது நவீன வகுப்பறைகளை அமைக்கவோ வழிசெய்யப்படும்.அது இப்பள்ளியின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் என்றும் டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மேலும், இவ்வட்டாரத்தில் நனிச் சிறந்த தமிழ் பாலர்ப்பள்ளியாக இயங்கி வரும் ஶ்ரீ செமர்லாங்கூ தொடர்ந்து அதன் தமிழ்ப்பணியை மேற்கொள்ளவும் திறன்பட இயங்கவும் ஆட்சிக்குழு உறுப்பினராக மட்டுமின்றி சுங்கை சட்டமன்ற உறுப்பினராகவும் தாம் தொடர்ந்து பங்களிப்பு செய்வேன் என்றார்.


முன்னதாக இப்பள்ளியின் தோற்றுநரும் ஆசிரியருமான திருமதி.சரஸ்வதிபானு கூறுகையில் இப்பாலர்ப்பள்ளியின் மாணவர்களின் பயன்பாட்டிற்காக மேசை,நாற்காலி உட்பட அதன் தேவைகளுக்காக தட்டப்பட்ட எந்தக் கதவுகளும் திறக்கப்படாத நிலையில் டத்தோ சிவநேசனை அனுகிய குறுகிய காலத்தில் எங்களின் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதோடு கேட்டவும் நிறைவு செய்து கொடுத்த டத்தோ சிவநேசன் அவர்களுக்கும் நன்றி பகிர்வதாக தெரிவித்தார்.


சுமார் 36 ஆண்டுகளாக ஶ்ரீ செமர்லாங்கூவின் கல்வி பயணம் தொடரும் நிலையில் இப்பள்ளியின் புதிய பொலிவுக்கு மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிக்கும் தொடர்ந்து டத்தோ சிவநேசன் வழங்கி வரும் ஆதரவும் உதவியும் இப்பாலர்ப்பள்ளி நனிச் சிறந்த இலக்கை நோக்கி பயணிக்க பெரும் நம்பிக்கையாக இருப்பதாகவும் கூறினார்.


டத்தோ சிவநேசனின் வருகையின் போது அவரை மழலைகள் பெரும் உற்சாகத்தோடு வரவேற்ற வேளையில் பள்ளி நிர்வாகவும் பெற்றோர்களும் அவரது பங்களிப்பால் ஶ்ரீ செமர்லாங்கூ பாலர்ப்பள்ளியின் புதுப்பொலிவைக் கண்டும் மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.- Alaiolinews 

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News