Alaioli
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

எஸ்.எஸ்.மணிமாறன் 

கோலக் கிள்ளான் மார்ச் 5.   நூறாண்டுகள் பழைமையான பண்டமாரான் ஜெயா அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை முன் வைத்து வழிபாட்டில் பங்கேற்று அம்பிகையின் அருட் கடாட்சம் பெற்றனர் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமானின் பிரதிநிதியாக வந்து கலந்து கொண்ட மாநில ஐ..சீட் உதவிப் பொருள் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படர, அம்மனின் அருளை வேண்டி ஆலயத்தில் திரண்டிருந்த அனைவரும் தங்களது காணிக்கைகளைச் சாற்றி மகேஸ்வரப் பூஜைக்குப் பிறகு அன்னதான உபசரிப்பிலும் பங்கேற்றதாக அவர் கூறினார்.  ஆலய நிர்வாகத்தினர் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட மூத்த அரசியல் தலைவர், புறநகர் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக சேவையாற்றி ஓய்வு பெற்ற டான் ஸ்ரீ க.குமரன், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவரது துணைவியார் ஆகியோருடன் தமக்கும் மலர் மாலை பொன்னாடை அணிவித்து சிறப்புப் பூஜையைத் தொடர்ந்து காளாஞ்சி வழங்கி கௌரவித்ததாக மாதவன் அலை ஒளியிடம் கூறினார்.


மாநில அளவில் செயல்படும் இந்து ஆலயங்கள் வளர்ச்சிக்கு தேவையான மானியம் வழங்கி உதவிடும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு, வேறொரு பணி நிமித்தம் வெளியே செல்லவிருப்பதால்,  தம்மை அழைத்து ஆலய மாசி மகத் திருவிழாவில் கலந்து கொள்ளும்படி பணித்ததாக மாதவன் தெரிவித்தார். ஆலய நிர்வாகத்தினரின் கட்டுக்கோப்பான நடவடிக்கையால் மாசிமகத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Post ImagePost Image

Leave a Comment
Trending News