தாசேக் குளுகோர், ஜூன் 12 –
பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய வகை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கோ. தியாகராஜன் தலைமையில் 2025ஆம் ஆண்டு செந்தமிழ் விழா விமர்சையாகவும் மரியாதையோடும் சிறப்பாகவும் நடைபெற்று, மாணவர்களிடையே தமிழ்ப் பற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் தூண்டும் நிகழ்வாக அமைந்தது.
இந்த விழாவை பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் சிறப்புரையுடன் தொடக்கி வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், \"செந்தமிழ் என்பது செம்மையான தமிழ், முழுமையான தமிழ் என்பதைக் குறிக்கிறது. தமிழோடு பயணித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இடைநிலைப் பள்ளிக்கு சென்ற பிறகும் தமிழைப் பாடமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயில வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார்.
இன்றைய சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் கைப்பேசிகள் உள்ளன என்பதை நினைவுபடுத்திய டத்தோஸ்ரீ, அவற்றில் வரும் செய்திகள் மற்றும் தகவல்களில் நல்லவை, அறிவை வளர்க்கும் செய்திகள், வெற்றியைத் தூண்டும் தகவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றார். நேரத்தை வீணாக்கும் வீடியோ, விளையாட்டுகள் மற்றும் தவறான செய்திகளில் அதிக நேரம் செலவிடாமல், சிந்தனையைத் தூண்டும் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி தனது 99 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, தலைமை ஆசிரியர் திரு. கோ. தியாகராஜன், நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னோட்ட பணிகளைத் திட்டமிட்டுள்ளார். பள்ளியின் வளர்ச்சிக்காக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். “தமிழின் வளர்ச்சி என்பது பள்ளி வளர்ச்சியோடு இணைந்திருக்கிறது” என்றும் கூறினார்.
விழாவில் மாணவர்கள் ஆடல், பாடல், பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களின் திறமைகளை மேடையில் வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. \"கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பதுபோல், இங்கு கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் அறிவையும் திறமையையும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வளர வேண்டும் என டத்தோஸ்ரீ கூறினார்.
மேலும், பழைய நீர் எங்கு விழுகிறதோ அந்தத் தன்மையைப் பெறும்; ஆனால் நீங்கள் தெளிந்த நீரோடையாக வெளிப்பட்டு பிறருக்கு பயன்பட வேண்டும்” என்ற உவமையின் மூலம் மாணவர்களை ஒழுக்கத்துடனும் விழிப்புணர்வுடனும் வாழ அழைத்தார்.
நிகழ்வில் முன்னாள் தலைமை ஆசிரியர் வே. தமிழ்ச் செல்வி, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பிரகாஷ், திரு. ஜெமா நசீர், திரு. அருண், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
தலைமைப் பொறுப்பேற்று வெறும் ஆறு மாதங்களில் பள்ளியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் புதிய ஆளுமையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பள்ளியைச் சுறுசுறுப்பாக மாற்றிய தலைமை ஆசிரியர் திரு. கோ. தியாகராஜனுக்கு விழா மேடையில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இவ்வாறு, மனப்பூர்வ தமிழ்ப் பாசமும் கல்வி வளர்ச்சியும் இணைந்த ஒரு விழாவாக 2025ஆம் ஆண்டு செந்தமிழ் விழா நினைவில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது.