Alaioli
மலேசிய நால்வர் மன்றம் கெடா மாநிலக் கிளை  64 தேவாரத் திருத்தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை.

அகல்யா

சென்னை,டிச.29 -கெடா -மலேசிய நால்வர் மன்றம் கெடா மாநிலக் கிளை 2019ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, ஆலோசகர் சிவதிரு. தமிழ்ச்செல்வன் பெரியண்ணன் அவர்களின் வழிகாட்டலிலும், தலைவர் சிவதிருமதி பரிமளாதேவி கிருஷ்ணன் தலைமையிலும், பல்வேறு ஆன்மிக மற்றும் சமயப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில், இம்மன்றத்தினர் ஒவ்வோர் ஆண்டும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். 2022ஆம் ஆண்டு 37 திருத்தலங்களுக்கும், 2023ஆம் ஆண்டு 40 திருத்தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டிருந்த மன்றம், இந்த ஆண்டு டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 3 வரை மேலும் 64 தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளது.


இம்முறை கும்பகோணம், தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய நால்வர் பெருமான்கள் திருவடிகள் பதிந்த திருத்தலங்களைச் சிவனடியார்கள் தரிசனம் செய்தனர். இதன் மூலம் மொத்தம் 276 தேவாரத் திருத்தலங்களில் 141 திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டதாகவும், மீதமுள்ள 135 திருத்தலங்களை இன்னும் மூன்று கட்ட யாத்திரைகளின் மூலம் நிறைவு செய்ய இறைவன் அருள் துணை நிற்க வேண்டும் என மன்ற ஆலோசகர் சிவதிரு. தமிழ்ச்செல்வன் பெரியண்ணன் தெரிவித்தார்.


ஒவ்வொரு யாத்திரையின்போதும், திருத்தல வரலாறுகள் மற்றும் தேவாரப் பதிகங்களின் தொகுப்புகள் அடங்கிய சிறப்பு வழிபாட்டு மலர் சிவனடியார்களுக்கு வழங்கப்படுவது இம்மன்றத்தின் தனித்துவமான சேவையாக விளங்குகிறது.மேலும், 60 வயது நிறைவடைந்த ஐந்து தம்பதிகளுக்குத் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா சிறப்பாக நடத்தப்பட்டமை, இந்த யாத்திரைக்கு கூடுதல் ஆன்மிகச் சிறப்பை அளித்ததாக மன்றத் தலைவர் தெரிவித்தார்.


இந்தத் திருத்தல யாத்திரை சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெற உறுதுணையாக இருந்த கோகுலம் நிறுவனத்தின் உரிமையாளர் சிவதிரு. அழகப்பா சின்னையா அவர்களுக்கும், யாத்திரை வழிகாட்டி சிவதிரு. ஞானமூர்த்தி ராஜூ அவர்களுக்கும் மன்ற நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News