Alaioli
ஜோகூர் இளைஞர்களை இணைக்கும் புதிய முயற்சி – மோகன் அருணாசலம் அழைப்பு

 கே.கே.ஆர்.தேவி

ஜோகூர், ஏப்.20 – ஜோகூர் மாநில இளைஞர்களை ஒரே தளத்தில் கொண்டு வந்து, சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் நோக்கில் ம.இ.கா இளைஞர் பிரிவு ஒரு சிறப்பு ஈடுபாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக மாநில இளைஞர் தலைவர் மோகன் அருணாசலம் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 8.30 மணிக்குத் தாமான் அக்கெரிக் சமூகநல மண்டபத்தில் நடைபெற உள்ளது.


ஜோகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சாரம் ஆட்சிக்குழு தலைவராகவும் ம.இ.கா மாநிலத் தொடர்புக்குத் தலைவராகவும் உள்ள மாண்புமிகு ரவீன் குமார் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கிறார்.


இந்நிகழ்ச்சி இளைஞர்களுக்கிடையில் தொடர்புகளை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் நேர்மையான மாற்றத்தை உருவாக்கும் தளமாக அமையும் என்றும் மோகன் அருணாசலம் தெரிவித்தார்.


இளைஞர்களின் கருத்துகள் கேட்கப்படும் சூழலை உருவாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.


 “நாம் தான் குரல், நாம் தான் மாற்றம்” என்ற எண்ணத்துடன் இளைஞர்கள் தங்களை முன்னிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


ஜோகூர் இளைஞர்கள் ஒன்றுபட்டுச் செயல்படும் போது சமூகத்தில் பலத்த முன்னேற்றம் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்று அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அனைவரையும் அழைத்துள்ளார்.-Alaiolinews

Leave a Comment
Trending News