Alaioli
23 மணி நேர திட்டமிட்ட நீர்விநியோக நிறுத்தம் – ஜோகூர் பாரு உட்பட 3 மாவட்டங்களுக்கு அறிவிப்பு

கே.கே.ஆர். தேவி

ஜோகூர், ஏப்.15 – ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, பொந்தியான் ஆகிய மூன்று மாவட்டங்களில் 21 ஏப்ரல் காலை முதல் 22 ஏப்ரல் காலை வரை 23 மணி நேரம் திட்டமிட்ட நீர்விநியோக நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


ஜோகூர் மாநில நீர்விநியோக சேவை வழங்கும் ரான்ஹில் எஸ்.ஏ.ஜே நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரை நீர்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். சுங்கை ஜோகூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழக்கமான பயன்பாட்டில், வீடுகள் அல்லது கட்டிடங்களில் உள்ள நீர் சேமிப்பு தொட்டிகள் சுமார் 24 மணி நேரம் வரை தேவையை சமாளிக்கக்கூடும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சேமிப்பு வசதி இல்லாதவர்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


திராம், ஸ்கூடாய், புக்கிட் இந்தா, இஸ்கந்தர் புத்ரி, கோத்தா திங்கி, பொந்தியான் உள்ளிட்ட பல பகுதிகள் இந்த திட்டமிட்ட நீர்நிறுத்தத்தால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் இடங்களின் முழுமையான பட்டியல் ரான்ஹில் எஸ்.ஏ.ஜே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் தகவல் அல்லது புகார் அளிக்க பொதுமக்கள் 1800-88-7474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். [customer.care@ranhillsaj.com.my](mailto:customer.care@ranhillsaj.com.my) என்ற மின்னஞ்சல் மூலமும் தகவல் பெற முடியும். அதேபோல் ATRanhillSAJ Aduan என குறுஞ்செய்தி பதிவு செய்து 63001 என்ற எண்ணிற்கு அனுப்பியும் சேவையை பெறலாம்.- Alaiolinews

Leave a Comment
Trending News