Alaioli
219வது போலீஸ் தினத்தை முன்னிட்டு அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பு பிரார்த்தனை பூஜை

கே.கே.ஆர்.தேவி

ஜோகூர் பாரு, ஏப்.18 –  219வது போலீஸ் தினத்தை முன்னிட்டு ஜோகூர் பாருவில் அமைந்துள்ள அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானம், ஜாலான் உங்கு புவான் பகுதியில் சிறப்பு இந்து பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.


நாட்டின் பாதுகாப்பிற்காக இடைவிடாத அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகளின் சேவை மற்றும் தியாகத்தை பாராட்டும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


ஜோகூர் மாநில போலீஸ் இந்து சமய சங்கத்தின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் உயரதிகாரிகள், போலீஸ் பணியாளர்கள், தன்னார்வலர்கள், குடும்பத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த நிகழ்வு, போலீஸ் படை மற்றும் பொதுமக்கள் இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது என நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஏ.சி.பி குமரேசன் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார், ஜோகூர் துணை போலீஸ் தலைவர் டிசிபி ஹூ சுவான் ஹுவாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


ஆன்மீக நல்லிணக்கம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது என இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர்,நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஏசிபி குமரேசன் தெரிவித்தார். சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை வளர்க்கும் தளமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.


இந்த முயற்சி போலீஸ் படை மற்றும் மக்களுக்கிடையிலான நம்பிக்கை உறவை மேலும் வலுப்படுத்தும் என டத்தோ எம். குமார் தெரிவித்தார். பல இன மக்களிடையே பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு உணர்வு வளர இத்தகைய நிகழ்ச்சிகள் உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமூக நல உதவியும் வழங்கப்பட்டது. 10 பெரியவர்கள், 15 குழந்தைகள் உட்பட 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.


இவர்கள் ஜோகூர் பாரு ராகன் செலிக் பிப்பி சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதரவு சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த உதவி, அவர்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் வழங்கப்பட்டதாக ஏசிபி குமரேசன் தெரிவித்தார்.




பல்வேறு இன மக்கள் கலந்து கொண்டது ஜோகூர் மாநிலத்தில் ஒற்றுமை உணர்வு தொடர்ந்து வலுப்பெற்று வருவதை காட்டுகிறது. போலீஸ் படையினரின் சேவையை பாராட்டுவதோடு, சமூக நலனில் அக்கறை காட்டும் பண்பையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.




இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. போலீஸ் படை மற்றும் பொதுமக்கள் இணைந்து சமூக பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்வது அவசியம் என்பதையும் இது வலியுறுத்தியது.- Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News