Alaioli
சிதம்பரம்பிள்ளை பள்ளி விளையாட்டு போட்டியில் துடிப்பாக ஓடிய மாணாக்கர்கள் ; மகிழ்ச்சியில் பெற்றோர்கள்-ஆசிரியர்கள்..!

டிகே.மூர்த்தி,

தெலுக் இந்தான், ஏப்ரல் 19-தெலுக் இந்தான் நகர் மையத்தில் அமைந்துள்ள 150 மாணவர்கள் கல்விக் கற்கும் (SRJKT) சிதம்பரம்பிள்ளை பள்ளிக்கான  விளையாட்டு போட்டி அப்பள்ளி திடலில் 63 ஆம் ஆண்டாக பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் சார்பில் நேர்த்தியுடன் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதிவரை பெற்றோர்கள் இருக்கையில் அமர்ந்த வண்ணம் இருந்துள்ளனர். இதற்கு தலைமையாசிரியர் ஸ்ரீ முருகன் குமரேசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆ.ஜெகதீசன்  இவ்விருவரிடம் காணப்படும் ஒற்றுமையே போகவிடாமல் கட்டிப்போட்டது என்றும் கூறலாம். 


அதன்படி இன்று காலை 8.30 மணியளவில் நம் நாட்டு “நெகாராக்கூ” தேசியக் கீதம் பாடப்பட்டது. அடுத்து, மாணவத்  தலைவர் விளையாட்டு போட்டிக்கான தீப்பந்தம் ஏந்தி திடலை சுற்றிவந்து அதை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரிடம் வழங்கிய நிலையில் அவர் விளையாட்டுப் போட்டியை முறைப்படி தொடக்கி வைத்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அனைத்து மாணவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற துடிப்பு மிக்க திறனை வெளிப்படுத்தினர். 


மூன்று அணிகளாகப் போட்டி இட்டதில், தங்கள் திறமையை வெளிப்படுத்திய நீல நிறக் குழுவே மொத்தம் 545  புள்ளிகள் எடுத்து முதல்நிலை வெற்றிக் குழுவாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் வெற்றி வீரங்கனையாக (6 ஆம் ஆண்டு மாணவி) உ.அபிராமியும், வெற்றி வீரராக (6 ஆம் ஆண்டு மாணவர்) ஜீ.பிரவின் ஆகியோரே தொடர் வெற்றிகளால் வெற்றிச் சின்னங்களைப் பெற்றுள்ளனர். 


வெற்றிப் பெற்ற ஏனைய மாணாக்கர்களுக்கு அப்பள்ளியின் வாரியக்குழு தலைவர் செந்தில்குமார் பெரியசாமி, தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் வருகை அளித்த பிரமுகர் வட்டார இந்து சங்கத் தலைவர் முனியாண்டி இராஜகோபால் வெற்றி  மாணவர்களுக்கு  பரிசுகளை எடுத்து வழங்கியுள்ளனர். மேலும், செந்தில்குமாருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்கள்-ஆசிரியர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார். 


தலைமையாசிரியர் உரையில், பள்ளியின் வளர்ச்சிக்காக மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள். மாவட்டக் காவல் துறை அதிகாரிகள், பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், உதவி ஆசிரியர்கள், பொதுப்பணியாளர்கள், பாதுகாவலர்கள், அரசு சாரா அமைப்பாளர்கள் மற்றும் ஊடகத்தார்களுக்கும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியைத்  தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டி என்பது எதிர்பார்ப்பைவிட  நனிசிறப்போடும் நடத்தப்பட்டதால்,  கொடை என்னும் காவியத்தில் வள்ளல் டத்தோ சிதம்பரம்பிள்ளையாரின் நெஞ்சினிக்க வைத்துள்ள உங்கள் அத்துனைப் பேருக்கும் இரு காரம் கூப்பி நன்றிக் கூறுகிறேன் என்றார் ஸ்ரீ முருகன் குமரேசன்.

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News