Alaioli
குழந்தைகள் துஷ்பிரயோகத்துக்கு ஜொகூர் சவால்: 657 பாதுகாப்புப் படையினர் தயார்

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, நவ.20-ஜொகூர் மாநிலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் சமீப காலங்களில் மேலும் வலுவடைந்துள்ளன. சமூகத்தில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அரசு மட்டுமன்றி மக்கள் அமைப்புகளின் ஒத்துழைப்பும் மிக அவசியமாகி வருகிறது. இதை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த பல துறைகளுடன் இணைப்பு ஏற்படுத்தி மாநில அரசு பல புதிய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.


இந்த விவரம், செங்காராங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி முகமட் யூஸ்லா இஸ்மாயில் எழுப்பிய கேள்விக்குப் ஜொகூர் மாநில பெண்கள், குடும்பம் மற்றும் மக்கள் நல வளர்ச்சி ஆட்சிக்குழு தலைவர் கைர்னிசா  இஸ்மாயில் முகமட் நோ குழந்தைகள் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் பணிகளில் மக்கள் நல அமைப்புகளின் நேரடி பங்களிப்பு மிகப் பொருத்தமானதாக இருப்பதாகவும், அதனை ஊக்குவிக்க அரசு பல வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் பதிலளித்தார்.


அவரின் விளக்கத்தின் படி, 2023ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் ஆதரவு அணி ஜொகூர் (Child Support Team Johor – CSTJ) பயிற்சி திட்டத்தின் மூலம் இதுவரை 657 தன்னார்வலர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்கள், குழந்தைகளில் ஏற்படக்கூடிய துஷ்பிரயோகச் சுட்டுக்காட்டுகளை அடையாளம் காணும் திறனைப் பெறுவதோடு, சமூகத்தில் அவற்றைத் தடுக்கும் பங்கையும் ஏற்றுள்ளனர்.


மேலும், ஜொகூர் மாநில சமூக நலத் துறை பல முகமைகளுடன் இணைந்து வழக்குக் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதில் போலீஸ், அரசு மருத்துவமனைகள், பள்ளி வழிகாட்டிகள், மதத் துறை, தூதரகம் போன்ற தொடர்புடைய அமைப்புகள் பங்கேற்கின்றன. இதன் மூலம் குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த 381 சம்பவங்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கவனிக்கப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்டார்.


அதே நேரத்தில், ஜொகூர் மாநிலம், குழந்தைகள் பாதுகாப்புச் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் குழந்தைகள் பாதுகாப்புப் படையின் பங்கினை உயர்த்தி வருகிறது. சமூகத் தேவைகளுக்கு ஏற்ப செயல்பாடுகளை நடத்த குழந்தைகள் செயல்பாட்டு மையங்கள் (PAKK) அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி, குழந்தைகள் மீதான அதிர்ச்சி, புறக்கணிப்பு, பள்ளி தவிர்ப்பு மற்றும் சமூகச் சிக்கல்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகிறது. மாநிலத்தில் தற்போது 10 குழந்தைகள் பாதுகாப்புப் படைகளும் 10 குழந்தைகள் செயல்பாட்டு மையங்களும் செயல்படுகின்றன என்பதை வலியுறுத்தினார்.


குழந்தைகள் பாதுகாப்பு சேவை சஞ்சாரம் (Jerayawara Perkhidmatan Perlindungan Kanak-kanak) திட்டம் நீதிமன்றம், தேசியப் பதிவு துறை, குடியேற்றம், நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் பிற முகமைகளுடன் இணைந்து வலுப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பு முயற்சிகளை விரிவுபடுத்த, மக்கள் அமைப்புகளின் நேரடி பங்குபற்றி செயல்படுதல் அரசு கொள்ளும் பெரிய முன்னேற்றமாக அவர் குறிப்பிட்டார்.


மேலும், டாருல் தக்ஜீம் குடும்ப மேம்பாட்டு அறக்கட்டளை (YPKDT) மாநிலம் முழுவதும் ஜௌஹர் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் (Jauhar Child Care Centre – JCC) அமைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. கோத்தா இஸ்கந்தர், பொந்தியான், மூவார், குளுவாங், பத்து பகாட், சிகாமாட் மற்றும் பிறப் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையங்கள், வேலைக்கு செல்கிற பெற்றோர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான, குழந்தைகளுக்கு ஏற்ற வளர்க்கும் சூழலை வழங்குகின்றன என்றார்.

Leave a Comment
Trending News