Alaioli
ஜொகூரின் வீடமைப்பு முன்னேற்றம் துரிதம்- 2026 பட்ஜெட்டில் மக்கள் நலப் பணிகள் வலுப்பெறும்

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, நவ.21-ஜொகூர் மாநிலம் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்களுக்கு நேரடியாக நன்மை வழங்கும் வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி துறைகளின் செயல்திறன் மேலும் வலுவடைந்துள்ளதாக, ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி ஆட்சிக்குழு தலைவர் டத்தோ’ ஜஃப்னி முகமட் ஷுகோர் தனது நேற்று முடிவுரையில் தெரிவித்தார். மந்திரி பெசார் டத்தோ’ ஒன் ஹஃபிஸ் காஸி தலைமையிலான மாநில அரசு முன்வைக்கும் ஒவ்வொரு கொள்கையும் ஒரு திட்டமாக மட்டுமல்லாமல், செயல்படுத்தத் தயாரான தெளிவான நடைமுறை வழிக்காட்டுதலாக உள்ளது என்றும் அவர் கூறினார்.


அண்மைத் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை 20,183 ஜொகூர் மலிவு வீடுகள் (Rumah Mampu Milik Johor) முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 8,915 வீடுகள் 2026ஆம் ஆண்டிற்குள் இறுதி ஒப்புதலுக்கு நகர்ந்து வருகின்றன. இந்த முன்னேற்றம் நகராட்சி நிறுவனங்கள், ஜொகூர் வீடமைப்பு முன்னேற்றக் கழகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் ஒத்துழைப்புடன் நுட்பமான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டதன் பலனாக கிடைத்துள்ளதாக டத்தோ’ ஜஃப்னி குறிப்பிடினார்.


ரூமா காசிஹ் ஜொகூர், ரூமா பிரிஹாதின் ஜொகூர் மற்றும் பெருமஹான் காசிஹ் ஜொகூர் ஆகிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் மேலும் வலுவடைந்து, வீட்டு வாடகை உதவி, வீட்டில் குடியேறும் உதவி மற்றும் முதல் வீடு வாங்கும் உதவி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுக்காக ரிங்கிட் 163 மில்லியன் ஒதுக்கப்பட்டு, 63,566 மக்களுக்கு பயனளிக்க உள்ளது. இந்த முழுமையான அணுகுமுறை வீடு பெறும் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு வலுவான துணையைக் கொடுக்கிறது என்றார்.


மாநிலம் பொறுப்பான முறையில் மெய்நிகர் வளர்ச்சியிலும் முன்னிலை வகிக்கிறது. தற்போது 51 தரவுத்தள மையங்கள் ஜொகூரில் உருவாக்கப்பட்டு வருவதுடன், மொத்த முதலீட்டுத் தொகை ரிங்கிட் 182.96 பில்லியன் ஆகும். இதன் மூலம் 7,561 உயர்திறன் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. அதேசமயம், ஜொகூர் மாநிலத்தின் 16 நகராட்சிகளும் ‘ஸ்மார்ட் சிட்டி’ தொடக்க நிலையை எட்டியுள்ளன. இதில் ஜொகூர் பாரு மாநகராட்சி நாடு முழுவதும் முதன்முறையாக ‘முன்னணி ஸ்மார்ட் சிட்டி’ மூன்றாம் நிலையை அடைந்துள்ளது.


மக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை ஒருங்கிணைத்து சீராக கையாளும் முயற்சியாக, ஜொகூர் மாநில ஒருங்கிணைந்த புகார் மையம் 2025ஆம் ஆண்டுக்கு ரிங்கிட் 1.5 மில்லியன் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கு ரிங்கிட் 2.65 மில்லியன் ஒதுக்கீட்டில் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் குறைகள் தனித்தனியாகச் செல்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வெளிப்படையான மற்றும் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் அமைய உள்ளது.


மேலும் 16 நகராட்சிகள் ‘காசிஹ் ஜொகூர் வவுச்சர்’ திட்டத்திற்காக ரிங்கிட் 14.9 மில்லியன் ஒதுக்கி, மக்களின் வாழ்க்கைச் செலவு சவால்களை ஒருங்கிணைந்த முறையில் சமாளிக்கும் மாநில அளவிலான பொறுப்புணர்வு வலுவடைந்ததை அவர் குறிப்பிட்டார்.அவர் முடிவில், ஜொகூரை மேலும் முன்னேற்றம் அடைந்த, போட்டித்திறன் மிக்க மாநிலமாக நிலைநிறுத்த அரசு தொடர்ந்து ஒழுங்காகவும் தொழில்முறை ரீதியிலும் பணியாற்றும் என உறுதிப்படுத்தினார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News