Alaioli
பினாங்கில் நடைபெற்ற சர்வதேச உணவு விழாவில்  திரளானோர் ஆர்வமுடன் பங்கேற்பு!

பினாங்கு நவம்பர் 21 சர்வதேச அடிப்படையில் பிரசித்திப் பெற்று விளங்கும் பல்வேறு நாடுகளின் பலதரப்பட்ட உணவு வகைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் ஓர் உன்னதச் சிறப்பினைக் கொண்ட விசேடமான விழாவினை, பினாங்கு மாநிலம் இங்கு ஆண்டுதோறும் போட்டி பொறுப்பேற்றி நடத்தி வரும் நிலையில், இவ்வாண்டும் இந்த அற்புதத்தை தக்க வைக்கும் முயற்சியில்,இதற்கான இறுதிப் போட்டி அங்கம் அண்மையில் பிச் ஸ்திரிட் சாலையிலுள்ள கோர்ட்யார்ட் வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


       
தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் நிதித்துறையின் துணையமைச்சருமான லிம் ஹூய் யிங் தலைமையிலும் மாநிலச் சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறைக்கானஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வை பார்வையுடனும் இந்த உணவு விழா விமரிசையாக களை கட்டியிருந்த நிலையில் இதற்கு மாநிலத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்களுடனும், இதரப் பல அழைப்பாளர்களுடனும், மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் தம்பதியர் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.


     
பலதரப்பட்ட உணவு வகைகளின் படையல்களும் காட்சிக் கூடங்களும் மாநிலத்திலுள்ள சமூகங்களுக்கிடையேயான கலாச்சாரக் கூறுகளை பிரதிபலித்துக் காட்டிய வேளையில், இங்கு படைக்கப்பட்ட பல்வேறு சமூகங்களின் பாரம்பரியமிக்க நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து பரவசத்தில் ஆழத்தியதோடு, உள்ளக் களிப்பையும் அளித்து, உற்சாகத்தில் திளைக்கச் செய்தன.

இதன் நிறைவு விழாவின் போது, லெபோ பந்தாய் அல்லது கடற்கரைத் தெரு என்று அழைக்கப்படும் இப்பகுதி கலகலப்புடன் தோற்றமளித்து பார்வையாளர்களின் பெருந்திரளால் நிரம்பி வழிந்தது. உணவுகளின் நறுமணங்கள் பாரம்பரிய இசையின்ஒலிநயங்கள், விளக்குகொளிகளின் பிரகாசங்கள் மற்றும் பற்பல கலாச்சார நடவடிக்கைகளால் இவ்வாட்டார வளிமண்டலம் மிகவும் உயிரோட்டமாக காட்சியளித்தன. பல்லின குடும்பத்தினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உணவு ஆர்வலர்கள் யாவரும் இங்கு ஒன்று கூடியதால், இது உணவு அனுபவங்களை ஒருவருக்கொருவர்பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களுக்கும் வழியேற்படுத்தியது.

Post Image

Leave a Comment
Trending News