Alaioli
தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி தனித்துப் போட்டியிட்டால் இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படும் - நினைவுறுத்துகிறார்

அரசியல் ஆய்வாளர்சந்திர சேகரன் ஆறுமுகம்!!

ஜொகூர்,மே20:எதிர்வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் நிலை உருவானால், நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரு கூட்டணிகளும் வெவ்வேறு வகையான அரசியல் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி ஒரே தொகுதிகளில் போட்டியிட்டால், அதனால் அதிக பலன் பெறக்கூடியது பெரிக்கத்தான் நேசினால் ஆகும்.அது மிக வலுவான கூட்டணி என்பதற்காக அல்ல; மாறாக எதிரணிகளின் வாக்குகள் பிளவுபடுவதால்தான்.


நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்பட்டால், குறிப்பாக நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களிடையே வாக்களிக்கும் உற்சாகம் குறையக்கூடும். இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில் குறைவு ஏற்படும் வாய்ப்புஅதிகமாக உள்ளது.2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணி ஆட்சியை அமைத்தது. அதற்குப் பின்னர் சில மாதங்களிலேயே மத்தியத்தில் ஒற்றுமை அரசாங்கம் உருவானது.


இதனால் ஜொகூர் மாநில அரசியலில் முற்றிலும் புதிய அரசியல் சூழ்நிலை உருவானது.இந்த சூழ்நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற பாரம்பரிய அணுகுமுறைக்கு பதிலாக, “சோதனை மற்றும் சமநிலை” என்ற அடிப்படையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஒருவேளை இந்த நடைமுறை உருவாகாமல் இருந்திருந்தால், எதிர்க்கட்சியாக நம்பிக்கை கூட்டணியின் அரசியல் நிலை இன்று முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும்.


2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், பெரிக்கத்தான் நேசினால் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், மொத்த வாக்காளர்களில் 24.04% பேர் அந்தக் கூட்டணிக்கு வாக்களித்திருந்தனர் என்பதை கவனிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, பெரிக்கத்தான் நேசினால் ஏற்படுத்தும் அரசியல் அச்சுறுத்தலை எளிதாக எடுத்துக்கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது என்பதை தெளிவாக காட்டுகிறது.


கடந்த சில ஆண்டுகளாக நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி இணைந்து, 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் கூட்டாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு குறித்து பல முக்கிய தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஜொகூர் மாநில முதல்வர் ஓன் ஹாபிஸ் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பு, அரசியல் சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.


நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி இடையேயான போட்டி, குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் மலாய் அல்லாத வாக்காளர்களிடையே அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.அதே நேரத்தில், தேசிய முன்னணி தனது பாரம்பரிய ஆதரவு வாக்குகளில் சிலவற்றை பெரிக்கத்தான் நேசினாலிடம் இழக்கும் அபாயமும் உள்ளது.


தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி மற்றும் பெரிக்கத்தான் நேசினால் ஆகிய மூன்று கூட்டணிகளும் மும்முனைப் போட்டியில் ஈடுபடும் கலப்பு மற்றும் புறநகர் தொகுதிகளில், பெரிக்கத்தான் நேசினால் குறைந்த பெரும்பான்மையிலாவது வெற்றி பெறக்கூடிய சூழல் உருவாகலாம்.


கடந்த நான்கு ஆண்டுகளாக ஒற்றுமை அரசாங்கமாக செயல்பட்டுவிட்டு, இன்று தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும் என அறிவிப்பது, இரண்டு தரப்பிற்கும் அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாகும். இது வெற்றிக்கான அறிகுறியாகத் தோன்றவில்லை.


இந்த சூழ்நிலையில், நம்பிக்கை கூட்டணி ஒரு நாள் கழித்தே “நாங்களும் தனித்து நிற்கத் தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்தது, ஜொகூர் மாநில நம்பிக்கை கூட்டணியின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது.எனவே, தோல்வியை நோக்கிச் செல்லும் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தி, நீண்டகால அரசியல் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் சிறந்த அரசியல் நகர்வாகும்.

Leave a Comment