Alaioli
20 ஆண்டுக்கால போராட்டத்திற்குப் பின் 18லட்சம்  செலவில் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலய மண்டபம் அதிகாரப்பூர்வ திறப்பு.

கோகி கருணாநிதி

உலு திராம் ஜூன் 1 – உலு திராம், தாமான் டேசா செமர்லாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலய மண்டபத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுக்கால போராட்டத்திற்குப் பின்னர் 8லட்சம் செலவில் மகா பிரமாண்டமாகக் கட்டப்பட்ட இந்த மண்டபம், அப்பகுதி இந்து சமுதாயத்தினருக்கும் பொதுமக்களுக்கும் வரலாற்றுச் சாதனையாக அமைந்தது என ரவீன் குமார் குறிப்பிட்டார்.



ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், ஆலய நிர்வாகத்தினர், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக மக்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியால் இந்த மண்டபம் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டுத் தெரிவித்தார்.


ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலய மண்டபத்தின் உருவாக்கம், ஜொகூரில் நிலவும் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் மத நல்லுறவின் அடையாளமாகத் திகழ்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.“இந்த புதிய ஆலய மண்டபம் வெறும் கட்டடம் மட்டுமல்ல. இது வழிபாட்டிற்கான மையம், கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் இடம், மக்களை ஒன்றிணைக்கும் சமூக மையம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் அனைத்து இனங்களும் மதங்களும் மதிக்கப்படுகின்றன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது,” என அவர் தெரிவித்தார்.


மேலும், ஜொகூர் மாநில அரசு அனைத்து இன மக்களும் தங்களது மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அமைதியாகவும் மரியாதையுடனும் மேற்கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகளைத் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.பல்நோக்கு பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம், மத நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களுக்குப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது இந்து மரபுகளைப் பாதுகாப்பதோடு, நல்லொழுக்க மதிப்புகளை வளர்க்கவும், உள்ளூர் மக்களிடையே உறவை வலுப்படுத்தவும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வில் ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆட்சிக்குழு உறுப்பினரும் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான  ரவீன் குமார் கிருஷ்ணசாமி, திராம் சட்டமன்ற உறுப்பினர்  ஹாஜி அசிசுல் பின் பச்சோக், கெமெலா சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, செனட்டர் டத்தோ ஹாஜி அப்துல் ஹலிம், ஜொகூர் மாநில ம.இ.கா செயலாளர் ஆர். குமரன், தெப்ராவ் பகுதி ம.இ.கா தலைவர் மார்ட்டின், யயாசான் சுல்தானா ரேகையா அறக்கட்டளைத் தலைவர் டத்தோ சுகுமாரன், ம.சீ.ச தலைவர் வீ கா சியான், பாசீர் கூடாங் மாநகராட்சி உறுப்பினர் மகேந்திரன், அரசுத் துறை பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


டேசா செமர்லாங்கில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலய மண்டபத்தின் திறப்பு, எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் நிலையான சமூக மரபுச் சின்னமாக அமையும் என்றும், உலு திராம் மற்றும் ஜொகூர் மாநிலத்தின் சமய, சமூக வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் ஆலயத் தலைவர் சுந்தரம் தெரிவித்தார்.

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News