Alaioli
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!

வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!!

பத்துகாஜா,செப்12: வரலாறு என்பது பாடங்களாய் கற்றுக்கொள்வது மட்டுமில்லை.அது ஒர் இனத்தின்,ஒரு சமூகத்தின்,ஒரு நாட்டின் கால கண்ணாடி. அது தலைமுறைகளைக் கடந்த கால பெட்டகம் என்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் 



தன் இன,மொழி,நாட்டின்  வரலாற்றை அறியாதவனால் தன் வரலாறு படைக்க முடியாது என்பது போல் நாம் வாழும் நாட்டின் வரலாற்றையும் நாம் வாழும் இடங்களின் வரலாற்றையும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது காலத்தின் அவசியமென்றும் அவர் மேலும் கூறினார்.


பாப்பான் நகரில் அந்நிலத்தின் கடந்தக் கால வரலாற்றைப் பேசும் வகையில் அமைக்கப்பட்ட வரலாற்று நினைவகத்தைத் திறந்து வைத்து பேசுகையில் மாண்புமிகு சிவகுமார் இதனை வலியுறுத்தினார்.பாப்பான் நகரம் மலேசிய வரலாற்றில் குறிப்பாக பேரா மாநில வரலாற்றில் பெரும் தடம் பதித்த ஒரு நகரம்.அதன் வரலாறு நீண்ட பின்னணியையும் பொருளாதாரத்தோடு பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் கொண்டது என்றார்.


மேலும்,ஈயத் தொழிலில் செழித்தோங்கிய இந்நகரம் சிபில் கார்த்திகேசு என்னும் மாபெரும் தியாகப் பெண்ணின் வரலாற்றையும் சுமந்து நிற்கிறது என்று நினைவுக்கூர்ந்த அவர் 2ஆம் உலகப் போரில் இந்நகரம் அதன் செழிமையை இழக்க நேர்ந்தது உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும் அன்றைய வாழ்வியல் முறைகளையும் நனிச் சிறப்பாய் பதிவு செய்தார்.


அதே வேளையில்,இந்நகரின் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியும் இங்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு வழிகாட்டியாக அமையவும். பாப்பான் நகரின் ரூக்குன் தேதாங்கா உருவாக்கியிருக்கும் இந்த வரலாற்று நினைவகம் சிறப்பான முயற்சியின் தடம் என்றும் இதனை உருவாக்கிய ரூக்குன் தேத்தாங்காவையும் அதன் நிர்வாகத்தையும் பாராட்டுவதாக கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர் பெரும் வரலாற்றின் ஒரு அங்கமாய் திகழும் பாப்பான் நகரம் இன்றைக்கு அதன் செழிமைகளையும் தொன்மைகளையும் தொலைத்திருந்தாலும் அந்நகரின் வரலாறு இன்னமும் இங்கு வாழும் மக்களின் நினைவுகளில் நீங்காமல் வாழ்கிறது என்று தனதுரையில்  உணர்வுப்பூர்வமாக கூறினார்.


உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்று நினைவகத்தில் அந்தக் காலத்தில் பாப்பான் நகரின் வாழ்வியல் சூழலைப் பேசும் படங்களும் ஓவியங்களும் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு வரலாற்றை நினைவுக்கூறும் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News