Alaioli
காலத்தை வென்று நிலைத்த குரல் கண்ணதாசன் – தமிழ் உலகின் அழியாத சக்தி!

தஷ்மிக்கா தியாகு

மஞ்சோங், ஜூன் 2-தமிழ் இலக்கியம் மற்றும் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்த கவியரசு கண்ணதாசனின் படைப்புகள் இன்றும் மக்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இருப்பதாக கண்ணதாசன் விழாவில் உரையாற்றிய பேச்சாளர்கள் தெரிவித்தனர்.


மலேசிய இந்துதர்ம மாமன்றம் சித்தியவான் அருள்நிலையம் மற்றும் சித்தியவான் சித்தர் குடில் ஆன்மீக இல்லத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “காலத்தை வென்ற கவிஞன் கவியரசு கண்ணதாசன்” என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர், எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பு இலக்கிய உரையாற்றினார்.


அவர் பேசுகையில், கண்ணதாசன் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், தமிழ் மொழியின் வளம், பண்பாட்டு அடையாளம் மற்றும் தத்துவ சிந்தனைகளை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்ற மகத்தான படைப்பாளி எனக் குறிப்பிட்டார். அவரது திரைப்படப் பாடல்கள் அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


காதல், துயரம், பிரிவு, நம்பிக்கை, ஆன்மிகம் போன்ற மனித உணர்வுகளின் அனைத்தையும் எளிய தமிழில் வெளிப்படுத்தியவர் கண்ணதாசன் என்றும், கடினமான தத்துவக் கருத்துகளையும் சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் பாடல்களாக மாற்றிய பெருமை அவருக்கே உரியது என்றும் அவர் புகழ்ந்தார்.


முன்னதாக இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மேனாள் விரிவுரையாளர் தமிழ்மாறன் பலராம், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு கண்ணதாசன் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது என சுட்டிக்காட்டினார்.


“கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்” போன்ற வரிகள் மூலம் மனிதநேயம், இறைநேயம் மற்றும் ஒழுக்கநெறிகளை மக்களிடம் கொண்டு சென்றவர் கண்ணதாசன் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில் இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த மலேசிய இந்துதர்ம மாமன்றம் சித்தியவான் அருள்நிலையம் மற்றும் சித்தியவான் சித்தர் குடில் ஆன்மீக இல்லத்தின் தலைவர் ஆசிரியர் கிருஷ்ணன் சுப்ரமணியத்திற்கு பங்கேற்றவர்கள் நன்றியும் பாராட்டும் கூறியதோடு,


இந்நிகழ்ச்சி தமிழ் சமூகத்தில் இலக்கிய விழிப்புணர்வை வளர்க்கும் முக்கிய முயற்சியாக இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியை ஆசிரியர் கோபால் சிறப்பாக வழிநடத்திய நிலையில், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், அருள்நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் மஞ்சோங் இராமகிருஷ்ண பஜனைக் குழுவினரின் (முன்னாள் கடற்படை வீரர்கள்) காதுக்கினிய கண்ணதாசன் பாடல்களின் இசைக் கச்சேரி இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News