Alaioli
ஜப்பான் மேடையில் ஜோகூர் மாணவர்கள் அசத்தல்  சர்வதேச புதுமை விருதை கைப்பற்றிய செரி கோத்தா புத்ரி 2 மாணவர்கள்

கே.கே.ஆர். தேவி

ஜோகூர் பாரு, மே 15 - ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் உச்சிமாநாடு மற்றும் ஸ்டெம் கல்வி பரிமாற்ற நிகழ்ச்சியில் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான சாதனையை பதிவு செய்து, “சிறந்த புதுமை யோசனை” விருதை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


ஜப்பானின் ஒசாகா க்யோய்கு பல்கலைக்கழகத்தில் மே 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜோகூர் பாங்சா முன்னோடி பள்ளித் திட்டத்தின் கீழ் செயல்படும் செரி கோத்தா புத்ரி 2 இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


அமெரிக்கா, சீனா, கனடா, ஹாங்காங், ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 சர்வதேச குழுக்களுடன் போட்டியிட்ட ஜோகூர் மாணவர்கள், தங்களது புதுமையான கண்டுபிடிப்பின் மூலம் நடுவர்களின் பாராட்டைப் பெற்றனர்.


இந்த வெற்றியைப் பெற்ற குழுவில் ஷ்ரீநிதி கிருஷ்ணன், பார்ஹான் அஸ்ரா அப்துல் ரஹிம், முகமது டோர்விஷ் தானி தர்வானி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு ஆசிரியர் யோகேஸ்வரி செல்லையா வழிகாட்டியாக இருந்தார். கடந்த ஆண்டு அவர் “சிறந்த அறிவியல் ஆசிரியர்” விருதைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


“கிரேஷன்” என பெயரிடப்பட்ட இந்த திட்டம், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் இயற்கை நிறப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ண மெழுகு புதுமையாகும். ஆட்டிசம் குழந்தைகளுக்கான உணர்வு திறன் கல்வியை ஸ்டெம் கற்றல் முறையுடன் இணைக்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.


இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன், அனைவர் இணைப்பு கல்வி போன்ற அம்சங்களை முன்னிறுத்துவதாகத் என கல்வி, தகவல் ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.


மேலும், இந்த புதுமை முயற்சி நிலையான வளர்ச்சி இலக்குகள் 4, 11, 12 ஆகியவற்றுடன் இணைந்திருப்பதாகவும் நடுவர்கள் பாராட்டியதாகக் கூறினார்.


இந்த சர்வதேச போட்டிக்காக ஜோகூர் மாநில கல்வித்துறை, ஜோகூர் மாநில அரசு, ஜோகூர் மாநில ராஜா ஸரித் சோஃபியா அறக்கட்டளை ஆகியவை ஆதரவு வழங்கின. மாணவர்களின் பயிற்சி மற்றும் தயாரிப்பிற்காக 10 ஆயிரம் ரிங்கிட் நிதியும் வழங்கப்பட்டது.

இந்த குழுவைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சித்தி நோர்பாயா தலைமையேற்று வழிநடத்தியதாகவும், மாணவர்கள் உலக அரங்கில் திகழ தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


ஜப்பானில் தங்கியிருந்த காலத்தில், மாணவர்கள் கியோட்டோ கல்விப் பல்கலைக்கழகத்திற்கும் கல்வி பயணம் மேற்கொண்டு, உலகத் தரத்திலான ஸ்டெம் கல்வி முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.


ஜோகூர் மாநில இளைய தலைமுறையை உலகளவில் போட்டியிடக்கூடிய திறமையாளர்களாக உருவாக்க மாநில அரசு மேற்கொண்டு வரும் கல்வி முதலீடுகளின் வெற்றியை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது என அஸ்னான் தாமின் குறிப்பிட்டார்.-Alaiolinews

Post Image

Leave a Comment