Alaioli
தன்னை மெழுகுவர்த்தியாய் உறுக்கி எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் சாதனைச் சுடர் ஆசிரியர்!-டத்தோஶ்ரீ கா. புலவேந்திரன்

செய்தி இளம்பரிதி

ஜோர்ஜ்டவுன் மே 16- "அன்னைத் தந்தை காட்டாத வழியை ஆசான் காட்டுவார்” என்ற தமிழர் மரபுச் சொல் போல, மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்காக திகழும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


அறிவால் மட்டும் அல்ல, அன்பாலும் மனிதநேயத்தாலும் ஒரு தலைமுறையை உருவாக்கும் தெய்வங்கள் ஆசிரியர்கள். இருளில் தடுமாறும் மனங்களுக்கு ஒளி தரும் விளக்கே ஆசிரியர். வறுமை, குடும்ப சிக்கல், மனக்கவலை போன்ற பல சுமைகளை சுமந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் இதயத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையை விதைப்பவர் ஆசிரியர்.


ஒரு நல்ல ஆசிரியரின் ஒரு வார்த்தை ஒரு மாணவனின் வாழ்நாளையே மாற்றி அமைக்கக்கூடும்."நீ சாதிப்பாய்” என்று ஆசிரியர் கூறும் ஒரு நொடி, மாணவரின் மனதில் ஆயுள் முழுவதும் ஒலிக்கும் ஊக்கமாக மாறுகிறது.


"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”என்ற திருக்குறளின் ஆழம் போல, ஆசிரியர்கள் விதைக்கும் கல்வி தலைமுறைகளை வளப்படுத்தும் செல்வமாகிறது.வகுப்பறையில் புன்னகையுடன் நிற்கும் ஆசிரியரின் பின்னால் எண்ணற்ற தியாகங்கள் மறைந்திருக்கின்றன. 


இரவு நேரம் வரை புத்தகங்களை. திருத்துவது, தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு உதவுவது, தன் ஓய்வையும் மறந்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது -இவை அனைத்தும் ஆசிரியரின் அமைதியான அர்ப்பணிப்புகளாகும்.


பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் ஆசிரியர் தின  விழா சிட்டி  பேவியூ தங்கும் விடுதியில் இன்று காலை சிறப்பாக நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மேலாளர் வாரிய தலைவர் டத்தோஶ்ரீ க.புலவேந்திரன் அவர்கள் தனது ஆசிரியர் தின வாழ்த்து உரையில்,“ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளிக்கூட அறைகளிலேயே உருவாகிறது.

அந்த எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்” என்று குறிப்பிட்டார்.


மேலும் அவர், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் அறிவோடு மனிதநேயமும் ஒழுக்கமும் கொண்டசிறந்த மாணவர்களை உருவாக்க  அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டினார்.


இந்த ஆசிரியர் தின விழாவில் உடன் கலந்துக்கொண்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கருஷ்ணன் அவர்கள் சிறந்த மாணவர் சமூதாயத்தை உருவாகுவதில் சிறந்த தன்னலம் கருதாத சிற்பியாக செய்படுபவர்கள் ஆசிரியர்கள் என்றும், இன்று பல துறைகளில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி அடைந்துள்ள வளர்ச்சிக்கு மிக சிறந்த பங்கினை ஆசிரியர்கள் ஆற்றிவுள்ளனர் என மனம் திறந்து தமது பாராட்டுக்களை கிருஷ்ணன் தெரிவித்தார்.


இதனிடையே, உடன் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேல் அறிவானந்தம் மிகவும் பணிச் சுமைக்கிடையே பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களின் தியாகத்தை ஆசிரியர் தினம் வழியாக அவர்களைச் சிறப்பிப்பது மகிழ்ச்சியான தருணம் என்றார்.


"கற்றது கைமண் அளவு,கல்லாதது உலகளவு” என்று தமிழர் சொல்வது போல, மாணவர்களை தொடர்ந்து கற்றலின் பாதையில் நடத்திச் செல்லும் நிலையான சக்தி ஆசிரியர்களே. அவர்கள் சமூகத்தின் உண்மையான செல்வங்கள்.


இன்றைய தொழில்நுட்ப உலகிலும் மனிதநேயம், மரியாதை, அன்பு, ஒற்றுமை போன்ற மனப்பண்புகளை மாணவர்களின் உள்ளத்தில் விதைப்பது ஆசிரியர்களே. அதனால் தான் ஆசிரியர்கள் ஒரு நாட்டின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக திகழ்கிறார்கள்.


இந்த ஆசிரியர் தினத்தில், அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பொறுமை, அன்பு மற்றும் தியாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன. உங்கள் சேவை என்றும் மாணவர்களின் இதயங்களில் வாழும்.


இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்பான மத்ய உணவு அளித்தும் சிறப்பு பரிசுகளும்  வழங்கப்பட்டதுடன்,பள்ளியை வீட்டி இதர பள்ளிகளில் மாற்றலாகி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்ச்சியில் உடன் முன்னால் தலைமையாசிரியர்கள் வீராசாமி,மகாலெச்சுமி,தமிழ்ச்செல்வி பள்ளி மேலாளர் வாரியக்குழு தலைவர் டத்தோ ஶ்ரீ கா.புலவேந்தரன்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கிருஸ்ணன் மற்றும் திறளான பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.


"ஆசிரியர் என்பவர் அறிவின் ஒளி; அவர் ஏற்றும் தீபம் தலைமுறைகளை ஒளிரச் செய்யும்.”-Alaiolinews

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment