Alaioli
ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்திய “மாபெரும் யோகா விழா: சூரிய பிராணா"

தி. கிரிஷன்

மலாக்கா, மே 30 – உடல், மனம், சிந்தனை ஆகிய மூன்றிற்கும் சமநிலையை அளிக்கும் தொன்மையான கலைவடிவமாக யோகக்கலை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆரோக்கியமான வாழ்வியலை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து யோகப் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், மலாக்காவில் நடத்தப்பட்ட “மாபெரும் யோகா விழா: சூரிய பிராணா” பொதுமக்களின் பேராதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம், “ஹங் துவா ஜெயா கிளையினரின் ஏற்பாட்டில் “அஸ்ட்ரா” யோகா நல்வாழ்வு மையத்தின் இணை ஆதரவோடு  இந்நிகழ்ச்சி முறையே நடைபெற்றது. இதுவரை இருமுறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, தற்போது மூன்றாவது முறையாக சீரும் சிறப்புடன் நடைபெற்றது. மலேசிய இந்தியர் இளைஞர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என 120-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியானது காலை 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை தொய்வின்றி நடைபெற்று நிறைவடைந்தது.

 

மலாக்கா மாநில இளைஞர் கூட்டமைப்புப் பேரவையின் தலைவர் டத்தோ கைதிரா அபு சாஹார் அவர்கள் இவ்விழாவினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அவரே நேரடியாக யோகப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு பங்கேற்பாளர்களுக்குப் பெரும் ஊக்கமளித்தார். மேலும், மலாக்கா மாநில முதல்வரின் சிறப்புச் செயலாளரான திரு. புவனேஸ்வரன் அவர்களும் சிறப்பு முகாமையராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

 

நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், மலாக்கா மாநில இளைஞர், விளையாட்டும் அரசு சாரா அமைப்புகளுமான (NGO) மேம்பாட்டுத் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ வி. பி. சண்முகம் வி. பிச்சை அவர்களும் மலாக்கா மாநிலத் தலைவர் டத்தோ முகமது ரித்வான் முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இளைஞர் - விளையாட்டு வளாகத்தில் இந்நிகழ்ச்சியை நடத்த முழு ஒத்துழைப்பு நல்கிய மலாக்கா மாநில இளைஞர், விளையாட்டுத் துறைக்கு, மலேசிய இந்தியர் இளைஞர் மன்ற ஹங் துவா ஜெயா கிளை தமது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டது. எதிர்காலத்திலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தப்போவதாகவும் உறுதியளித்தது.

 

இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னணியில்  முமதன்மைப்  பொறுப்பாளர்களான மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம், மலாக்கா மாநில தலைவரும் ஹங் துவா ஜெயா கிளைத் தலைவருமான திரு. கிருஷ்ணா தோகைநாதன், துணைத் தலைவர் திரு. ஹரிபிரசாந்த்ராஜ் ராஜேந்திரன், நிகழ்ச்சி இயக்குநர் குமாரி ஸ்ரேயா ரேஷ்மி ஆகியோரின் அர்ப்பணிப்பும் முறையான திட்டமிடலும் இவ்விழாவின் வெற்றிக்குக் காரணக் கர்த்தாவாக விளங்கியது.

 

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த துணை நின்ற அனைத்துப் பங்கேற்பாளர்கள், தொண்டூழியர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டுக் குழுவினர் தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் சமர்ப்பித்தனர். ஆரோக்கியமானதொரு சமுதாயத்தை நோக்கி மக்களை வழிநடத்தும் முயற்சியாக அமைந்த “மாபெரும் யோகா விழா”, கலந்துகொண்ட அனைவரின் மனத்திலும் பசுமரத்தாணியைப் போல பதிந்திருக்கும்.

 

 


Post ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News