Alaioli
கே.கே.ஆர் தேவி
ஜொகூர் பாரு, ஜூன் 17 – ஜொகூர் மக்கள் புத்திசாலித்தனமான, கொள்கை உறுதியான, அகங்காரம் இல்லாத மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படக்கூடிய தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை தாம் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜோகூர் மந்திரி பெசாரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது ஜோகூர் சுல்தானின் அரச ஒப்புதலின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்பதை பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜோகூர் தேசிய முன்னணி, வரவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருப்பது பிரதமரால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், ஜொகூர் மக்களின் பெரும்பான்மை விருப்பத்தைக் கேட்டு, கொள்கை அடிப்படையில் முடிவு எடுத்ததற்காக தாம் அகங்காரமானவர் எனக் கருதப்படுகிறோமா என்று கேள்வி எழுப்பினார்.
ஜொகூர் தேசிய முன்னணியும் மாநில அரசும் ஒருபோதும் ஒத்துழைப்பை மறுத்ததில்லை என்றும், பிறரின் கருத்துகளையோ உதவிகளையோ ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனினும், ஜொகூர் அரச குடும்ப அமைப்பின் மரியாதை, மாநிலத்தின் நலன் மற்றும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முயற்சிகளை முழுமைப்படுத்தும் வகையில் ஜொகூர் மாநில அரசு தொடர்ந்து உதவி வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சின் பொறுப்பில் உள்ள பள்ளிகளுக்காக ஆண்டுதோறும் மாநிலத்தின் அனைத்து ஆசிரியர் அறைகளுக்கும் பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, உள்துறை அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் நிர்வகிக்கும் குடியேற்ற, சுங்க மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள், மாவட்ட காவல் தலைமையகங்கள் மற்றும் இராணுவ முகாம்களுக்கும் மாநில அரசு ஆண்டுதோறும் உதவி வழங்கி வருவதாக அவர் கூறினார்.
சுகாதார அமைச்சின் பொறுப்பில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் பொது சுகாதார வசதிகளுக்கும் மாநில அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாநில வருவாய் அதிகரிக்கும் நேரங்களில் மாநில அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் அல்லாமல், ஜோகூரில் பணியாற்றும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
“எந்த அமைச்சகம் அல்லது எந்த அரசு பொறுப்பேற்றுள்ளது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. ஜோகூர் மக்கள் அதனால் பயனடைகிறார்களா என்பதே முக்கியம்,” என்று அவர் கூறினார்.
இவ்வாறான உதவிகளைப் பற்றி பேசுவது பெருமை பேசுவதற்கோ அல்லது பழைய விஷயங்களை நினைவூட்டுவதற்கோ அல்ல என்றும், “ஜொகூர் மாநில அரசு எந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை, ஆதரவு அளிக்கவில்லை அல்லது ஒரே பாதையில் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது?” என தாழ்மையுடன் கேள்வி எழுப்புவதாகவும் ஒன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.
உயர் கல்வி
தமிழ் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் வர்ணம் தீட்டும் கலை குறித்து விழிப்புணர்வு
காவல்துறை செய்திகள்
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
கோவில் விழாக்கள்
ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மாநில செய்திகள்
தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு வெ.10 ஆயிரம் - மாண்புமிகு சிவகுமார் வழங்கினார்.
மாநில செய்திகள்
பாகான் டத்தோ தொகுதி ம.இ.கா. ஏற்பாட்டில் திருமுறை ஓதும் விழா
மாநில செய்திகள்
தெலுக் இந்தானில் தேசிய தினம் மற்றும் மலேசியா தினத்தை முன்னிட்டு ஜலோர் கெமிலாங் வழங்கிய சிவபாலன்
மாநில செய்திகள்
வரலாறு தலைமுறைகளின் காலப் பெட்டகம் - டாக்டர் சிவகுமார்!