Alaioli
சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது

சபாக் பெர்ணம், ஜூன் 7 –சபாக் பெர்ணம் தோட்டம் (தோர்கிங்டன்) ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் ஆலயத்தின் 94ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா, நேற்று காலை தொடங்கி இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலையென திரள மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.


நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைப் பெற்ற இந்த ஆலயம், பல தலைமுறைகளாக தோட்ட மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம்பிக்கையின் அடையாளமாக விளங்கி வருகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா, வெறும் மத வழிபாட்டு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் முன்னாள் தோட்டப் பாட்டாளிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் உணர்வுபூர்வமான சந்திப்பாகவும் திகழ்கிறது.


இவ்வாண்டு சிலாங்கூர், பேராக் நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட காட்சிகள் விழாவிற்கு தனித்துவமான அழகை சேர்த்தன.


திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் பக்தர்களை ஆன்மிக பரவசத்தில் ஆழ்த்தின. அதனைத் தொடர்ந்து பால்குடம், தீச்சட்டி, கரகங்கள் ஏந்திய பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி அம்மனின் அருளைப் பெற்றனர்.


விழாவின் உச்ச நிகழ்வாக நடைபெற்ற தீமிதி உற்சவம் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது. கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பின் மீது பக்தர்கள் அச்சமின்றி நடந்துசென்ற காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அம்மன் திருநாம முழக்கங்களும் பக்திப் பாடல்களும் ஒலித்த ஆலய வளாகம் முழுவதும் பக்தி மணம் கமழ்ந்தது.


94 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த திருவிழா, ஒரு ஆலய நிகழ்வைத் தாண்டி தோட்ட மக்களின் பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தை தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பெருவிழாவாக மீண்டும் ஒருமுறை திகழ்ந்தது.


இத்திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகா பைடிதல்லி அம்மன் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன் சிம்மாஞ்சலம் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News