Alaioli
பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டியில் சாதனை

ஆர்.ரமணி

பினாங்கு ஜூன் 1- பினாங்கு, ஜூன் 2026 – பினாங்கு மாநிலத்தை சேர்ந்த சுங்கை ஆரா மற்றும் பத்து காவான் தோட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற Road to Codeavour 7.0 International Level என்ற சர்வதேச போட்டியில் பங்கேற்று பள்ளி, பினாங்கு மற்றும் மலேசியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளனர்.


20 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் மலேசியாவிலிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி அணி நான்காவது ஆறுதல் பரிசை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. இது பினாங்கு தமிழ் பள்ளி சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வெற்றியாகும்.


மாணவர்கள் அறிமுகப்படுத்திய “Ecobot Sorter” என்ற புதுமைத் திட்டம், உலோகம், உயிரியல் முறையில் சிதைவடையும் பொருட்கள், காகிதம், பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுகள் மற்றும் கண்ணாடி போன்ற கழிவுகளை தானாக வகைப்படுத்தும் அறிவார்ந்த அமைப்பாகும். இந்த கண்டுபிடிப்பு, மாணவர்களின் குறியீட்டு (Coding) மற்றும் ரோபோட்டிக்ஸ் திறமைகளை மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவர்களின் விழிப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது.


மலேசிய கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்றது, தமிழ் பள்ளி மாணவர்களிடையே ரோபோட்டிக்ஸ், STEM, குறியீட்டு தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் திறமைகளை வளர்க்கும் முயற்சிக்கு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


பினாங்கு தமிழ் பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வி மேம்பாட்டை வலுப்படுத்துவதே தனது முக்கிய இலக்காக இருந்ததாகத் தலைவர் அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார். மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள், பயிற்சிகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்பட்டால் அவர்கள் உலகத் தரத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.


இந்த வெற்றி, பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்கள் மாநில மற்றும் தேசிய மட்டங்களைத் தாண்டி சர்வதேச அரங்கிலும் போட்டியிடும் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துள்ளது. எதிர்கால சவால்களை சமாளிக்க STEM, ரோபோட்டிக்ஸ் மற்றும் AI கல்வியில் முதலீடு செய்வது மிகவும் அவசியமானது என்றும் சுந்தராஜூ சோமு அவர் கூறினார்.


பொதுவாக இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தும் வழக்கம் இருந்தாலும், தவிர்க்க முடியாத பணிச்சுமை காரணமாக இம்முறை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கோம்தாரில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். மாணவர்களின் சாதனையை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழும் ரிமா 300 மதிப்பிலான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.


மாணவர்களின் வெற்றிக்கு பங்களித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த வெற்றி அனைவரின் ஒத்துழைப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் பலனாகும் என்றார்.
பினாங்கு தமிழ் பள்ளி மாணவர்களை ரோபோட்டிக்ஸ், STEM, செயற்கை நுண்ணறிவு, குறியீட்டு தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு துறைகளில் மேலும் வலுப்படுத்த பல்வேறு கல்வித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
“தமிழ் பள்ளி மாணவர்கள் டிஜிட்டல் மாற்றத்தின் ஓட்டத்தில் பின்தங்காமல், உலகளாவிய சிந்தனையுடன் கூடிய, போட்டித்திறன் மிக்க, படைப்பாற்றல் கொண்ட எதிர்கால தலைமுறையாக உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.


இறுதியாக, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த வெற்றி மேலும் பல தமிழ் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளித்து, உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லத் தூண்டட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.“பினாங்கு தமிழ் பள்ளிகள் தொடர்ந்து முன்னேறட்டும்; பினாங்கு தொடர்ந்து வளமுடன் திகழட்டும்.”

Post ImagePost Image

Leave a Comment
Trending News