Alaioli
 ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை

ஆர்.ரமணி/ கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, ஜூன் 2 – கடந்த மே 31, 2026 அன்று ஜொகூர் பாரு, தெலுக் ஜாவாவில் அமைந்துள்ள இந்து கருமகிரியை மையத்திற்கு ஜொகூர் மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ ஆன் ஹாபிஸ் காசி அவர்கள் சிறப்பு வருகை தந்தார்.இந்த வருகையின்போது, மாண்புமிகு திரு. ராவன் குமார், சுல்தானா ரொகாயா அறக்கட்டளையின் (YSR) இயக்குநர் வாரிய உறுப்பினர்கள், மலேசிய இந்து சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் இந்திய சமூகத் தலைவர்களுடன் இணைந்து மாநில முதல்வரை அன்புடன் வரவேற்றனர்.


மையத்தின் வளாகத்தை மாநில முதல்வருக்கு நேரில் சுற்றிக்காட்டியதோடு, அதன் கட்டுமானப் பணிகள் மற்றும் 2026 மார்ச் 20 முதல் இந்து சமூகத்தினர் இவ்வளாகத்தை பயன்படுத்தி வரும் விதம் குறித்து விரிவான விளக்கமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வின் போது, ஜொகூர் இந்து இந்திய சமூகத்தின் சார்பில், இம்மையம் அமைவதற்காக நிலம் வழங்கிய மலேசியப் பேரரசர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கும், ஜொகூர் இளவரசரும் தற்காலிக சுல்தானுமான துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் அவர்களுக்கும் ஆழ்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


அத்துடன், மையத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு ஆதரவுகளை வழங்கிய ஜொகூர் மாநில அரசுக்கும், மாநில முதல்வர் டத்தோ ஆன் ஹாபிஸ் காசி அவர்களுக்கும் இந்திய சமூகத்தினர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தும் ஜொகூர் மாநில அரசின் தலைமைத்துவமும், ‘பங்சா ஜொகூர்’ கொள்கையின் கீழ் எந்த சமூகமும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் அர்ப்பணிப்பும் இந்த வருகையின் மூலம் மீண்டும் வெளிப்பட்டது.


முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இந்து கருமகிரியை மையம், ஜொகூர் மாநில இந்து சமூகத்திற்குப் பெரும் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், மலேசியாவின் பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணத் திட்டமாக திகழும் என சமூகத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News