Alaioli
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு

ஜோகூர் பாரு, ஜூன் 4– வரவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமூக ஒற்றுமையை பாதுகாக்க இந்திய சமூகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி கேட்டுக்கொண்டார்.தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜோகூரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மக்களிடையேயான ஒற்றுமையே அடிப்படை என்று கூறினார்.இந்நிகழ்வில் ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆட்சிக்குழு உறுப்பினரும் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான  ரவீன் குமார் கிருஷ்ணசாமி உடன் கலந்துக்கொண்டார் 


“இந்த அழகான மாநிலத்தை நாம் அனைவரும் இணைந்து முன்னேற்ற வேண்டும். அதற்கான ஒரே வழி மக்களிடையே உண்மையான ஒற்றுமை நிலவுவதுதான்,” என்றார் அவர்.மாச்சாப் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, ‘பங்சா ஜோகூர்’ என்பது வெறும் கோஷமல்ல என்றும், அது மக்களின் மனதில் இருந்து வர வேண்டிய உணர்வாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


“பங்சா ஜோகூர் என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய அடையாளம். அது பேச்சில் மட்டும் இல்லாமல் செயல்களிலும் வெளிப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.அரசியல் சூழ்நிலை சூடுபிடித்து வரும் இந்த நேரத்தில், சில பொறுப்பற்ற தரப்பினர் சமூகங்களுக்குள் பிரிவினை மற்றும் வெறுப்பு உணர்வுகளை தூண்ட முயற்சிக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.


“அப்படி யாராவது சமூகங்களுக்குள் பிளவை ஏற்படுத்த முயன்றால், அது ஜோகூரின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும். பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய வளர்ச்சி ஒரே இரவில் சிதைந்துவிடக்கூடும்,” என்றார்.மேலும், ஜோகூரில் செயல்படுத்தப்படும் வீட்டு வசதி திட்டங்கள் அனைத்து இன மக்களுக்கும் திறந்தவையாக உள்ளதாகவும் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.


“2030க்குள் 100,000 வீட்டு வசதிகளை உருவாக்கும் இலக்குடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது 24,000க்கும் மேற்பட்ட மலிவு விலை வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன,” என்றார்.வீடு வாங்க முடியாதவர்களுக்கு வாடகை உதவித் திட்டமும் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


“இந்த திட்டங்கள் மலாய், சீனர், இந்தியர் என அனைத்து மக்களுக்கும் சமமாக வழங்கப்படுகின்றன. இளைஞர்களுக்காக ஆண்டுதோறும் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.இந்திய சமூகத்தினர் ஜோகூர் வீட்டு வசதி வாரியமான PKPJ இணையதளத்தில் பதிவு செய்து இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி  கேட்டுக்கொண்டார்.


2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி மந்திரி பெசாராக பதவியேற்றார்.இதனிடையே, அடுத்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்து போட்டியிடும் என்றும் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி  உறுதிப்படுத்தினார்..


மலேசியாவின் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் Johor, பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல்வேறு நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. மாநிலத்தின் தற்போதைய வளர்ச்சி திட்டமான “மாஜு ஜொகூர் 2030” (Maju Johor 2030) கொள்கையின் கீழ், மாநில வருவாயின் பலன்கள் நேரடியாக மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Onn Hafiz Ghazi தலைமையிலான ஜொகூர் மாநில அரசாங்கம், “மக்களின் நலனே அரசின் முன்னுரிமை” என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.


பந்துவான் காசிஹ் ஜொகூர் (Bantuan Kasih Johor - BKJ)

ஜொகூர் மாநில அரசின் மிகப்பெரிய மக்கள் நலத் திட்டமாக “பந்துவான் காசிஹ் ஜொகூர்” (BKJ) கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், தனித்தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு நேரடி நிதி உதவிகளை வழங்குகிறது.


2026 ஆம் ஆண்டுக்காக மட்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ஜொகூர் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனாதைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள், புற்றுநோய் மற்றும் டயாலிசிஸ் நோயாளிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த உதவித் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்


வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் முயற்சிகள்

உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினை கருத்தில் கொண்டு, ஜொகூர் மாநில அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதியவர்கள், இல்லத்தரசிகள், சிறு வியாபாரிகள், மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நேரடி நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.


அதோடு, “ஜுவாலான் காசிஹ் ஜொகூர்” (Jualan Kasih Johor) போன்ற திட்டங்கள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.


வீட்டு வசதி மற்றும் குடியிருப்பு உதவித் திட்டங்கள்

வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படைத் தேவையாகும். இதனை கருத்தில் கொண்டு ஜொகூர் மாநில அரசாங்கம் “பெருமாஹான் காசிஹ் ஜொகூர்” (Perumahan Kasih Johor) மற்றும் “ருமாஹ் பிரிஹாதின் ஜொகூர்” (Rumah Prihatin Johor) போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


முதல் வீடு வாங்குபவர்களுக்கு நிதி உதவி, வீட்டில் குடியேறுவதற்கான செலவின உதவி, குறைந்த வாடகை வீட்டு வசதி மற்றும் சொந்த நிலம் கொண்ட கிராமப்புற மக்களுக்கு வீடு கட்டுவதற்கான உதவி போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கி வருகின்றன.


பெண்கள், முதியவர்கள் மற்றும் சமூக நல உதவிகள்

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனித்தாய்மார்களுக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. வேலை செய்யாத இல்லத்தரசிகளுக்கும் மாநில அரசாங்கம் நேரடி நிதி உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு நிதி உதவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இத்துடன், தன்னார்வத் தொண்டர்கள், மத போதகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூகப் பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்கள்

ஜொகூர் மாநில அரசாங்கம் கல்வித் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஆதரவு, உயர்கல்வி பயிலும் இளைஞர்களுக்கு நிதி உதவிகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


மேலும், மாநிலத்தில் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


பொருளாதார வளர்ச்சியும் மக்கள் நலனும்

ஜொகூர் மாநிலம் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஈர்த்து, மலேசியாவின் முக்கிய பொருளாதார மையமாக உருவெடுத்து வருகிறது. மாநில வருவாய் அதிகரிக்கும் போது அதன் பயன்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற கொள்கையை மாநில அரசாங்கம் பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக சமூக நல உதவிகள், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவு குறைப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.


முடிவுரை

ஜொகூர் மாநில அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்கள், சாதாரண நிதி உதவிகளைத் தாண்டி சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான நலக் கொள்கையாக அமைந்துள்ளது. ஏழைகள், முதியவர்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு சமூகக் குழுக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், மாநிலத்தின் வளர்ச்சிப் பலன்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் அரசாங்கத்தின் உறுதியை வெளிப்படுத்துகின்றன. எதிர்காலத்திலும் இந்த நலத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ஜொகூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கிய கருவியாக தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News