சத்யா பிரான்சிஸ்
பினாங்கு பிறை ஜூன் 6- பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு யுஏஎஸ்ஏ ( UASA) தேர்வு மீள்பார்வை நூல்களை பிறை ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயம் வழங்கியது. கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மீள் பார்வை புத்தகங்களை ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயம் வழங்கி வந்துள்ளது இவ்வாண்டு 60,000 வெள்ளி செலவில் மாணவர்களுக்கு மீள்பார்வை நூல்களை வழங்குவதாக ஆலயத்தின் தலைவர் மேஜர் எம். சேகரன் கூறினார்.
ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயம் சமயப் பணியோடு சமூகப் பணியும் ஆற்றி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளில் சமயப் புதிர் போட்டி, விளையாட்டுப் போட்டி பண்பாட்டு நிகழ்ச்சிகள், வழிகாட்டி கருத்தரங்கம் போன்றவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆலயம் இதுவரை பதினெட்டு லட்சம் வெள்ளியைச் செலவு செய்து எந்த ஆலயமும் செய்யாத பெரிய சாதனையைச் செய்துள்ளது என முன்னாள் தலைமையாசிரியர் டத்தோ கே. ராஜமாணிக்கம் தமதுரையில் கூறினார்.
தமிழ்ப் பள்ளிகள் என் இதயத்தின் அருகாமையில் உள்ளது. தமிழ்ப் பள்ளிகள் வாழ்ந்தால் தமிழ் வாழும். தமிழ் வாழ்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள். தமிழர்கள் வாழ்ந்தால் கலை, பண்பாடு, சமயம் வாழும். இதற்கு ஜாலாபாரு ஆலயம் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவை செய்வது அறிந்து மிகவும் பாராட்டுகிறேன் எனது தமதுரையில் கூறினார் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு.
பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு ஆறாம் வகுப்பு மாணவர்கள் யுஏஎஸ்ஏ தேர்வு மீள்பார்வைக்கான கணக்கு, சரித்திரம், அறிவியல், தமிழ், ஆங்கிலம், மலாய், பூகோளம் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். உமா பதிப்பகம், ஜெயபக்தி நிறுவனம் பதிப்பித்த இந்த நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டன.
நிகழ்ச்சியின்போது மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் முகமை அமைப்பாளர் பாஸ்கரன் சுப்பிரமணியம் எழுதிய 'தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு' என்ற நூலை பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க டத்தோசிரி சுந்தரராஜூ சோமு பெற்றுக்கொண்டு, தமிழ்ப் பள்ளி நூல் நிலையங்களுக்கு வழங்கினார்.
சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் ஜாலான் பாரு ஆலய அறங்காவலர் குழுவினர், பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் உதவி இயக்குநர் கார்த்திக், பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் சக்திவேல் உட்படத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், துணைத் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

