Alaioli
ஜசெகவிற்கு சிக்கலா – நுனிப்புல் மேயும் ஆய்வுகள் வேண்டாம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகவே அம்னோவுடன் அரசியல் பயணம்!!

 ஜனநாயக செயல் கட்சியின் அரசியல் பயணம் சிக்கலுக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருப்பது போல் அடிப்படையற்ற ஒரு விடயத்தை “ஜசெகவிற்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்” என வெளியான கட்டுரை உண்மையிலேயே நுனிப்புல் மேய்ந்திருப்பது போல் தான் உள்ளது.ஆக்கப்பூர்வமாகவும் ஆதாரங்களோடும் அக்கட்டுரை இடம் பெறவில்லை என்று பேரா ஜசெகவின் உதவித்தலைவர் மாண்புமிகு அ.சிவநேசன் தனது கருத்தினைப் பதிவு செய்தார்.


   வெளியான அக்கட்டுரை கற்பனைவாதம் மிகுந்ததாகவே தாம் நம்புவதாக கூறிய அவர் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜசெக –அம்னோவின் அரசியல் பயணம்,செனட்டர் நியமன அதிர்ப்தி மற்றும் சாலையோர அகதிக்கு எலும்புத்துண்டு வழங்கிய இளைஞர்களின் போக்கு என சிலவற்றை கட்டுரையாளர் சுட்டிக்காண்பித்துள்ளார்.ஆனால்,இவையெல்லாம் எந்த நிலையில் ஜசெகவிற்கு சிக்கலைக் கொண்டு வரும் என அக்கட்டுரை விரிவாக பேசவே இல்லை என்பதுதான் உண்மை.


   அம்னோவுடன் ஜசெகவின் அரசியல் பயணம் என்பது நாட்டின் எதிர்காலத்தையும் நம்பிக்கையான வருங்கால தலைமுறைகளை உருவாக்கும் மாபெரும் நோக்கத்தைக் கொண்டது.அம்னோ ஜசெகவின் பரம எதிரி.இருந்தும் ஜசெக எடுத்த ஒரு முடிவு தான் இன்றைக்கு நாட்டை சரியான இலக்கை நோக்கி கொண்டுச் செல்ல பெரும் பங்காற்றுகிறது.கொள்கை நிலையிலும் கோட்பாடு வகையிலும் ஜசெகவும் அம்னோவும் எதிரும் புதிருமான கட்சிகள்.


   ஆனால்,இனவாதம்,மதவாத சக்திகளிடம் நாட்டை அடமானம் வைத்து மலேசியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதை தவிர்க்கவே அம்னோ -  ஜசெக கூட்டணி ஒற்றுமை அரசாங்கமாய் அமைந்து மடானி அரசாய் இன்று உயிர்பெற்றுள்ளது.கடந்த பொதுத்தேர்தலில் ஆட்சி அமைக்க எந்த கூட்டணியும் பெரும்பான்மையை எட்டாத நிலையில் ஜசெக மிக முக்கியமான அரசியல் நகர்வை மேற்கொள்ள வேண்டியிருந்தது.நம்பிக்கை கூட்டணியில் ஜசெக மிக முக்கியமான ஒரு கட்சி.ஜசெக என்ன முடிவு எடுக்குமென நாடே எதிர்பார்த்த நிலையில் அம்னோவுடன் கூட்டணி அமைத்து நாட்டை வழிநடத்த ஜசெக எடுத்த முடிவு அக்கட்சியின் சுமார் 60 ஆண்டுக்கால அரசியல் பயணத்தின் திருப்புமுனை எனலாம்.

ஜசெக ஒருகாலத்தில் பாஸ் கட்சியோடு கைகோர்த்து 2008இல் பேரா மாநில ஆட்சியைகூட கைப்பற்றினோம்.பினாங்கு மாநிலத்தையும் கைப்பற்றினோம்.அதுமட்டுமின்றி ஐந்து மாநிலங்கள் அன்றைய நாளில் எதிர்கட்சி வசமானது.பாஸ் கட்சி மதம் சார்ந்து தங்களின் அரசியல் கட்டமைப்பை கொண்டிருந்தாலும் அன்றைக்கு அக்கட்சியின் தலைவராக இருந்த மாபெரும் தலைவர் தோக்குரு நிக் அசிஸ் அவர்களின் மனிதம் கொண்ட மாண்பு அக்கட்சியோடு எங்களை ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையோடும் பயணம் செய்ய வைத்தது. 


ஆனால்,அவரது மறைவுக்குப் பின்னர் அக்கட்சி தீவிர மதவாதப் போக்கினைக் கையாளத் தொடங்கிவிட்டது.பாஸ் கட்சியோடு ஒப்பிடுகையில் அம்னோ நாட்டில் மிகப் பெரிய மலாய்,இஸ்லாமிய கட்சியாக இருந்தாலும் அவர்களிடையே காணப்படும் விவேகமான பார்வை பாஸ் கட்சியிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


மலேசியாவை அனைத்து மக்களுக்குமான நாடாகவும் பண்பாடும் பாரம்பரியமும் கொண்ட நாடாகவும் ஒவ்வொரு இனத்தின் தாய்மொழியோடு அவர்களின் பண்பாட்டை மெய்ப்பிக்கவும் அம்னோவுடன் கைகோர்த்ததில் இதுவரை எந்தச் சிக்கலும் வந்ததில்லை.கொள்கைகள் வேறுதான்,அரசியல் நிலைப்பாடும் வேறுதான்.ஆனால்,நாட்டின் மீது கொண்டிருக்கும் விசுவாசமும் மக்களின் நலன் காப்பதிலும் ஜசெக – அம்னோவால் ஒன்றாக பயணிக்க முடிவதே இன்றைய காலக்கட்டத்தின் அரசியல் முதிர்ச்சி எனலாம்.


பேரா மாநிலத்தைப் பொருத்தமட்டில் கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக 18 சட்டமன்றத் தொகுதியை வென்றது.அம்னோ 8 சட்டமன்றங்களை மட்டுமே வென்றது.இருந்த போதிலும் எல்லா நிலையிலும் ஆராய்ந்த பின்னர் அம்னோவின் தலைமையில் பேராவில் ஆட்சி அமைத்தோம்.முதலில் இவ்விரு கட்சிக்குமே ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது என்பது மறுப்பதற்கில்லை.


முதல் ஆறு மாதங்களில் பல்வேறு ஐயங்களோடு ஒவ்வொரு நாளும் நகர்ந்த நிலையில் மூன்றாண்டை எட்டும் மாநில ஆட்சியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் மேலோங்கி இன்றைக்கு வலுவான அரசாங்கமாய் பேரா மாநில அரசாங்கம் திகழ்கிறது.இந்த ஆட்சியில் பேரா மாநிலத்தில் இந்தியர்களின் நலன்,தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்,ஆலயங்களின் மேம்பாடு,இந்தியச் சமுதாயம் எதிர்நோக்கும் நிலப்பட்டா சிக்கல் என பல்வேறு விடயங்கள் அதீத இலக்கை எட்டியிருப்பது பெருமிதமானது.


குறிப்பாக,தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்தியச் சமுதாயத்தின் நலனுக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் மாநில வரவுசெலவில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.தேசிய முன்னணியில் ம இ கா இருந்தபோது கிடைக்காத அளவிற்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பேரா மாநிலத்தில் ஜசெக – அம்னோ இடையிலான உறவு நன்நிலையில் இருப்பதால் இந்தியச் சமுதாயமும் பெரும் நன்மை அடைந்தும் வருகிறார்கள்.


அரசியலில் நிரந்திர நண்பனும் இல்லை.நிரந்திர எதிரியும் இல்லை என்பது போல் தான் ஜசெக,அம்னோ உறவு.இருந்தாலும் ஜசெக ஒருபோதும் அக்கட்சியின் கொள்கை,கோட்பாட்டிலிருந்து விலகாது.ஜசெக மக்களுக்காக,மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி.மக்களின் குரலாகத்தான் ஒலிக்குமே தவிர அதிகாரத்தின் சூழ்ச்சியிலோ அல்லது இனவாத,மதவாத சக்திகளின் சூழ்ச்சியிலோ வீழ்ந்திடாது என்றும் பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் தெரிவித்தார்.


காலங்கள் மாறுகின்ற.அரசியல் சூழல் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.இந்நிலையில்,மக்களுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் விவேகமான முடிவுகளை நாம் எடுத்துதான் ஆக வேண்டும்.அதற்காக கொள்கைகளை அடமானம் வைக்கிறோம்.அதனால் ஜசெகவிற்கு சிக்கல் மேல் சிக்கல் என்றெல்லாம் ஒவ்வாத கருத்துகளைப் பதிவு செய்யக்கூடாது.


ஜசெக இந்தியச் சமுதாயத்தின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற அர்சியல் கட்சி.சீனர்களின் பெரும் ஆதரவும் இக்கட்சிக்கு உள்ளது.கடந்தகாலங்களோடு ஒப்பிடுகையில் மலாய்காரர்களின் ஆதரவும் ஜசெகவிற்கு நன்நிலையில் திரும்பியுள்ளது.மலேசியர்களுக்கான கட்சியாக ஜசெக அது தொடங்கப்பட்ட நோக்கத்தை எட்டும் நிலைக்கும் அரசியலில் இலக்கை நொக்கி பயணித்துள்ளது.


அதேவேளையில்,சம்மதப்பட்ட கட்டுரையாளர் சொலவது போல் செனட்டர் வூ நியமனம் என்பது கட்சியின் முடிவு.எப்போதுமே இம்மாதிரியான முடிகளால் குறிப்பிட்ட சிலர் அதிர்ப்திக் கொள்வது வழக்கம் தான்.ஆனால்,கட்சியின் நலன்,அதற்காக உழைத்தவர்கள்,அர்ப்பணித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் கட்சியின் பெரும் கடமை என்பதையும் நாம் உணரதானே வேண்டும்.


எனவே,ஜசெக மலேசியர்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவும் அதற்கு சிக்கலை கொண்டுவராது. மாறாய்,மலேசியர்களுக்கு நன்மையைதான் கொண்டு வரும்.இந்நாடும்,நாட்டு மக்களும் செழிமையுறும் சூழலில் வாழ ஜசெக – அம்னோவின் அரசியல் பயணம் சிறப்பாகவே நகரும் என்றார்.

Leave a Comment
Trending News